tamilnadu

பொறியியல் கலந்தாய்வு: ஜூலை 3ல் தொடங்குகிறது

சென்னை,ஏப். 21பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதிமுதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்தக் கலந்தாய்வு 2017-18கல்வியாண்டு வரை ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் சென்னையில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பெற்றோருடன் சென்னைக்கு வர வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதில் ஏற்படும் பல்வேறுசிரமங்களைப் போக்கும் வகையில், கடந்த கல்வியாண்டில் ஆன்-லைன் பி.இ., கலந்தாய்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய நடைமுறை மூலம், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே, கலந்தாய்வில் பங்கேற்கும் வசதி ஏற்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு மட்டும் குறிப்பிட்ட நாளில், வீட்டுக்குஅருகில் இருக்கும் கலந்தாய்வு உதவி மையத்துக்கு மாணவர்சென்றால் போதும் என்ற நிலை உருவானது. இதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அதிவேக வலைதள வசதியுடன் அமைக்கப்பட்டன. இந்தச் சூழலில், பி.இ., கலந்தாய்வை நடத்தும் கலந்தாய்வுக் குழுவில் இணைத்தலைவராக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சிலஅரசு பொறியியல் கல்லூரிமுதல்வர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து உயர் கல்வித் துறைசார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு, பி.இ., கலந்தாய்வுக் குழுவின் தலைவராக இருக்கும் தனக்குத் தெரிவிக்காமல் எடுக்கப்பட்டதாக துணைவேந்தர் சூரப்பா புகார் தெரிவித்ததோடு, குழுவின் தலைவர் பொறுப்பை ராஜிநாமா செய்வதாகவும் அறிவித்தார். இதன் காரணமாக 2019-20 ஆம்கல்வியாண்டுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பி.இ. கலந்தாய்வு நடத்தும் பொறுப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைத்தும், அண்ணா பல்கலைக்கழகத்தை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்தும் உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான பி.இ. ஆன் லைன் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் நடத்த உள்ளது.கடந்த ஆண்டைப் போலவே தமிழகம் முழுவதும் 42 கலந்தாய்வு உதவி மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில் நிகழ் கல்வியாண்டு (2019-2020) பொறியியல் சேர்க்கைக்கான பி.இ., ஆன்-லைன் கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஞாயிறன்று (ஏப்.21) அறிவித்தது. இதற்கான விண்ணப்பப் பதிவு மே 31 ஆம் தேதி கடைசி நாளாகும்.