tamilnadu

img

தேர்ச்சிதான் 11 ஆம் வகுப்பு சேர்வதற்கான தகுதியே தவிர, மதிப்பெண்கள் அல்ல....

சென்னை:
நோய்த்தொற்று அதிகமாக உள்ளதற்போதைய சூழ்நிலையில் பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளதால் ஐஐடி, பாலிடெக்னிக், மற்றும் பிளஸ் 1வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதில் எந்த குழப்பமும் இல்லை என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியுள்ளார்.

சுமார் 15 வயதுடைய 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒன்றாம்வகுப்பு முதல் 10வகுப்பு வரை  படித்து வந்ததைத்தான் பொதுத்தேர்வு நடந்திருந்தால் எழுதி யிருப்பார்கள். திடீரென்று படித்ததை எழுதவில்லை. இரண்டாவது அவர்கள் படித்தது பொதுப் பாடங்கள் தானே தவிர. சிறப்பு வாய்ந்த பாடங்கள் அல்ல. 10ஆம் வகுப்பில் எல்லா பாடத்திலும் அடிப்படை கூறுகளைப் படிக்கிறார்களே தவிர எந்தப்பாடத்தையும் சிறப்புப் பாடமாக எடுத்துப்படிப்பதில்லை.இவர்கள் 10ஆம் வகுப்பு முடித்த பிறகு 11ஆம் வகுப்பு போகும் போதுதான் சிறப்புப் பாடங்களை எடுத்துப்படிக்கப் போகிறார்கள்.  எனவே இவர்களுக்கு 1ஆம் வகுப்பு தொடங்கி 10ஆம் வகுப்பு வரை தொடர் முழு மதிப்பீடு என்று சொல்லக் கூடிய  விரிவான மதிப்பீடு நடந்திருக்கும். இந்த மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்துதான் ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்பிற்குத் தேர்ச்சி பெற்று வந்திருக்கிறார்கள். பாடத்தைப் படித்தது, படித்ததில் புரிந்ததை கேள்விக்குப் பதிலாக எழுதுகிறார்களா என மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் முடித்து 10ஆம் வகுப்பு வந்தபிறகு அறிவியலில் செய்முறைத்தேர்வை முடித்திருக்கிறார்கள்.  அதுமட்டுமல்லாமல் வகுப்பறைகளுக்கும் சென்றிருப்பார்கள். வகுப்புத் தேர்வு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதியுள்ளார்கள்.இந்த மதிப்பெண்ணைக் கணக்கில் கொண்டு பொதுத்தேர்வுக்கான மதிப்பீடாகக்கொள்ளமுடியாது எனச் சிலர் கூறுகிறார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்றால் மாணவர்கள் பாடத்தில் முழு கவனம் செலுத் தினார்களா? எல்லா பள்ளிகளிலும் எல்லா பாடங்களுக்கும் ஆசிரியர்கள் போதுமான அளவில் இருந்தார்களா?  சமச்சீராக  ஆசிரியர்கள் நியமனம் இருந்ததா?

என்ற கேள்விகள் எழலாம். காலாண்டு, அரை யாண்டு தேர்வு வரைகூட சில பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.  ஆசிரியர்கள் பணிமாற்றத்தில் வந்து பாடம் நடத்தினார்கள். சில பள்ளிகளில் டெபுடேஷனில் வந்து பாடம் நடத்தினார்கள்.
எனவே பள்ளிகளில் நடந்த தேர்வு  மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி கொடுக்கலாம் என்று தற்போது அரசு அறிவித்திருந்தாலும் பொதுவாகக் கடந்த 10 ஆண்டுகளை ஆய்வுசெய்தால் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டிற்கு அதிகமான  மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாமல் போனது 5சதவீதத்திற்கும் குறைவானவர்களே. எனவே 95 சதவீத மாணவர்கள் எப்படியும் தேர்ச்சி பெறத்தான் போகிறார்கள் என்கிறபோது  100 சதவீத மாணவர்களும் தேர்ச்சிபெற்றதாக இறுதியாக அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது.இனி  11 ஆம் வகுப்பு. ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையை எதைவைத்து நடத்துவது  என்று சிலர் கேட்கிறார்கள். 10ஆம் வகுப்பு தேர்ச்சிதான் 11 ஆம் வகுப்பு சேர்வதற்கான தகுதியைத் தவிர மதிப்பெண்கள் அல்ல.  10ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்துத்தான் 11 ஆம்வகுப்பிற்கு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று விதிமுறை இல்லை.

குரூப் 1, குரூப்2 எனப் பிரிக்கும் போது மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவுசெய்யலாம். மேலும் ஒரு குரூப்பை அதிக மாணவர்கள் தேர்வு செய்யும்போது அருகமை மாணவர்களை அனுமதிக்கலாம். அல்லது வயதை வைத்து முடிவு செய்யலாம். சமூகச் சூழலை வைத்துத் தேர்வுசெய்யலாம்.10ஆம் வகுப்பில்  ஒரு மாணவி அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தால் அந்த மாணவி பிளஸ் - 1 வகுப்பில் அறிவியல் குரூப்பைத்தான் தேர்வுசெய்வார் என்று அர்த்தம் இல்லை. வணிகவியல் பாடத்தையும் அவர் தேர்வு செய்யலாம். இப்படிப் பல பள்ளிகளில் நடந்திருக்கிறது என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.