tamilnadu

img

மின்வாரிய தனியார்மயமாக்கலை எதிர்த்து இன்று மின்ஊழியர்கள் போராட்டம்

சென்னை:
அனைத்து மாநில மின் வாரியங்கள் தனியார்மயமாக்கப்படும் என்ற மத்திய  நிதியமைச்சரின்  அறிவிப்பைக் கண்டித்தும் இதனை உடனடியாக திரும்பப்பெறக்கோரியும் மே 18 திங்களன்று மின்ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)வின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 இந்திய நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள் அர்ப்பணிப்பு மிக்க பணியை செய்து வரும் வேளையில், மத்திய நிதியமைச்சர்  முதல் கட்டமாக யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்வாரியம் தனியார்மயப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.அடுத்தகட்டமாக அனைத்து மாநில மின் வாரியங்கள் தனியார் மயமாக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி மத்திய அரசு, மாநில மின் வாரியங்களை பிரிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற மின் ஊழியர்கள், பொறியாளர்கள் அலுவலர்கள் அனைவரும் மே 18 அன்று பிரிவு அலுவலகங்களில் காலையிலும், கோட்ட அலுவலகம் மத்திய அலுவலகம் ஆகிய இடங்களில் உணவு இடைவேளை நேரத்திலும் பத்து நிமிடம் ஒலி  முழக்கங்களை எழுப்பிட வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி இந்த இயக்கத்தை நடத்திட வேண்டும்.  

மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பாக இந்த வேண்டுகோள் முன்வைக்கப்படுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கை மே 21 அன்று நடைபெற உள்ள அனைத்து சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.