சென்னை:
தமிழக சட்டப்பேரவை கூட்டம் திங்களன்று (செப். 14) கூட உள்ள நிலையில் பேரவைத் தலைவர் தனபால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி நிறைவடைந்தது. அதற்கு பிறகு இம்மாதம் 14 ஆம் தேதி சட்டசபையை மீண்டும் கூட்ட முடிவு செய்யப்பட்டது.கொரோனா தொற்று பரவல் காரணமாக வழக்கமாக நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.வரும் 14ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3ஆம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ளதையொட்டி எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.கொரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான தூசி கே. மோகன், பெண் உறுப்பினரான பொன். சரஸ்வதி ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.