சென்னை:
விவசாயிகள் பயிர்வகை மற்றும் பரப்பளவு சம்பந்தமான அடங்கல் எந்த வகையில் கொடுத்தாலும் அதை ஏற்று கடன் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மின்-அடங்கல் மட்டுமே ஏற்கப்பட வேண்டுமென்ற உத்தரவை உடனடியாக திரும்பப் பெற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழ்நாடு முழுவதும் விவசாயப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விவசாயப் பணிகளை மேற்கொள்ள கடன் கோரி கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்கள், இணைய தள மின் அடங்கல் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றும் கையால் எழுதப்பட்ட வருவாய்த் துறையினரின் அடங்கல் சான்றிதழை ஏற்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருப்பதாக மாவட்ட பதிவாளர்களும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெற முடியாமல் திகைத்து நிற்கின்றனர்.
தமிழ்நாட்டில் நிலம் சம்பந்தமான ஆவணங்கள், பயிர் வகைகள், பரப்பளவு போன்றவை இன்னமும் கணினிமயமாக்கப்படாமல் தொடக்க நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில் மின் அடங்கல் மட்டுமே ஏற்கப்படும் என்றால் பெரும்பகுதி விவசாயிகள் கடன் பெற முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே, பெரும்பாலான சிறு-குறு விவசாயிகளுக்கு கடன் கிடைக்காத நிலை இருந்து வருகிறது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். எனவே, விவசாயிகள் பயிர்வகை மற்றும் பரப்பளவு சம்பந்தமான அடங்கல் எந்த வகையில் கொடுத்தாலும் அதை ஏற்று கடன் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். மின்-அடங்கல் மட்டுமே ஏற்கப்பட வேண்டுமென்ற உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனக் கோருகிறோம். அத்துடன் விவசாய கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் சண்முகம் தெரிவித்திருக்கிறார்.