சென்னை:
சென்னை விமான நிலைய இ-பாஸ் மையத்தில் ஊழியர்கள் பணிக்கு வராததால், வெளி மாநிலங்களிலிருந்து வந்த பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியே வருவதற்கு பல மணி நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் வெளி மாநிலங்களிலிருந்து வருகின்ற பயணிகளுக்கு இ-பாஸ் கொடுப்பதற்கும், அந்த இ-பாஸ்களில் திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியது இருந்தால், அதை செய்து கொடுப்பதற்கும் சிறப்பு மையங்கள் சென்னை உள்நாட்டு முனைய வருகைப் பகுதியில் உள்ளன.
இந்த மையங்களில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் ஷிஃப்ட் முறையில் பணிக்கு அமர்த்தப் பட்டுள்ளனர். வெள்ளியன்று காலை 7.30 மணிக்கு ஐதராபாத்திலிருந்து 173 பயணிகளுடன் ஒரு விமானமும், காலை 8.30 மணிக்கு 166 பயணிகளுடன் மற்றொரு ஹைதராபாத் விமானமும் அடுத்தடுத்து சென்னை வந்தன.அதில் வந்த பயணிகள் ஏற்கெனவே இ-பாஸ் இணையதளத்தில் பெற்றிருந்தவர்கள் தங்களுடைய கைபேசிகளில் இ-பாஸ் களை காட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர். ஆனால், இரண்டு விமானங்களிலும் வந்த வெளி மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் இ-பாஸ் பெறவில்லை.மத்திய அரசு அறிவிப்பின்படி ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து பல மாநிலங்களில் இ-பாஸ் நடைமுறையில் இல்லை. ஆனால், தமிழ்நாடு அரசு இம்மாதம் 31ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறையை நீடித்துள்ளதால், இந்த வெளிமாநிலப் பயணிகள் இ-பாஸ் இல்லாமல் சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல முடியவில்லை.
இதையடுத்து அந்தப் பயணிகள் விமான நிலையத்திற்குள் உள்ள இ-பாஸ் மையங்களுக்குச் சென்றனர். ஆனால், கவுன்டர்களில் யாரும் இல்லை.
இதனால், பயணிகள் விமான நிலைய அலுவலர்களிடம் விசாரித்தனர். அவர்கள் மாவட்ட நிர்வாகம் தான் அதற்குப் பொறுப்பு என்று கூறியுள்ளனர். இதையடுத்து நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் விமானநிலைய அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு விமான நிலைய அலுவலர்கள் தகவல் கொடுத்தனர்.அப்போது இரவுப் பணியில் இருந்தவர்கள் பணி முடிந்து சென்று விட்டனர். காலை பணிக்கு வரவேண்டிய பணியாளர்கள் இன்னும் வரவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து விமானநிலைய அலுவலர்களும், பாதுகாப்புப் ணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் சேர்ந்து பயணிகளை சமாதானப்படுத்தினர். அத்தோடு பயணிகளின் கைபேசிகள் மூலமாக இ-பாஸ்களை பதிவிறக்கம் செய்து சமாளித்து வெளியே அனுப்பினர்.இதனால் சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ்கள் கிடைக்காமல் நூற்றுக்கணக்கான பயணிகள்; குறிப்பாக வெளிமாநிலப் பயணிகள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பயணிகளும், விமான நிலைய அலுவலர்களும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற் கொண்டு வருகிறது.