சென்னை:
மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக குற்றங்கள் இழைப்பவர்கள் மீது 2016 உரிமைகள் சட்டத்தின்படி தண்டனை வழங்க வகை செய்யும் சரத்துக்களை வலுவிழக்கச் செய்யும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கொள் ளப்பட உள்ள நகல் திருத்தங் களை முன்மொழிந்து 4 குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளிடம் கருத்து கேட்டு மத்திய ஊனமுற்றோர் துறை இயக்குனர் கடிதம் எழுதி உள்ளார். இதற்கு எதிராக நாடு முழுதும் உள்ள மாற்றுத்திறனுடையோர் உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தகைய முயற்சியை கைவிட வலியுறுத்தி ஊனமுற்றோர் உரிமைகளுக் கான தேசிய மேடை தலைமையில் நாடு முழுவதும் உள்ள 125 அமைப்புகள், ஆர்வலர்கள் இணைந்து கூட்டாக டெல்லியில் சனிக்கிழமை (ஜூலை 4) அறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிக்கையின் முக்கிய உள்ளடக்கம் வருமாறு:மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கு எதிராக குற்றங்கள் இழைப்பவர்கள் மீது தண்டனைகள் வழங்க போதிய சரத்துக்கள் இல்லாததன் காரணமாகவே பழைய 1995ஆம் ஆண்டு ஊனமுற்றோர் பாதுகாப்பு மற்றும் சமவாய்ப்பு சட்டம் திரும்பப்பெறப் பட்டு, 2016 ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் இயற்றப்பட் டது. ஆனால், இச்சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்பட முயற்சிக்கிறது.மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டத்தில் பரிந்துரைக்கப் பட்டுள்ள திருத்தங்களின்படி, இச்சட்டத்திற்கு எதிராக அல்லது சட்டத்தை மீறி செயல்படுவோருக்கு தண்டனை வழங்கும் மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டப் பிரிவு-89, பொது இடங்களில் உள்நோக்கோடு மாற்றுத்திறனாளிகளை அவமதிப்பதற்கு எதிராக தண்டனை வழங்கும் பிரிவு-92(ய), தகவல்கள் வழங்க மறுப்பதற்கான தண்டனை பிரிவு-93 ஆகியவற்றை வலுவிழக்க செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது. இத்தகைய குற்றங்கள் புரிவோர் காவலில் இருந்தாலும், அவர்களை மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய, மாநில ஆணையர்கள் விடுவிக்க வகையில் தற்போது சட்டத்தில் உள்ள சிறிய பற்களைக் கூட நீக்கும் முயற்சியில் அரசின் முன்மொழிவுகள் உள்ளன.உரிமைகள் சட்டத்தில் உள்ள தண்டனை பிரிவுகள், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நமது நாட்டில் முதலீடு செய்ய வருவதை பாதிக்கிறது என்பதால், சிறிய குற்றங்களுக்கான தண் டனைகளை குறைக்கும் விதத்தில் மறுபரிசீலனை செய்ய அரசு விரும்புகிறது என கூச்சநாச்சமின்றி திருத்த முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. எந்த ஒரு உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளரும் நம் நாட்டில் உள்ள சட்டங்களை மதித்து செயல்பட வேண்டுமே தவிர, அவர்கள் வசதிக் ஏற்ப நமது சட்டங்களை வளைத்துக் கொடுக்க முடியாது. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக இதனை துணிச்சலாக மோடி அரசு செய்கிறது.
மாற்றுத்திறனாளி சட்டத்தில் மட்டுமே இப்படிப்பட்ட திருத் தங்கள் மேற்கொள்ளப்படுவதாக நாம் தனித்துப் பார்க்க இயலாது. காப்பீடு சட்டம்-1938, வருங்கால வைப்பு நிதி சட்டம்-2013, ரிசர்வ் வங்கி சட்டம்-1934, நபார்ட் சட்டம்-1981, வங்கி ஒழுங்குமுறை சட்டம்-1949, பணம் வழங்கல் மற்றும் தீர்வு முறைகள் சட்டம்-2007, ஆயுள் காப்பீடு சட்டம்-1956, திட்டங்கள் சட்டம்-2019 உள்ளிட்ட 19 சட்டங்களில் உள்ள தண்டனை சரத்துக்களை வலுவிழக்கும் விதத்தில் திருத்தங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சில சட்டங்களிலும் இதைப்போன்று செய்யப்பட உள்ளன. கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கை பயன்படுத்தி உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளை அனுமதித்து, நமது பொருளாதாரத்தை தங்குதடை இல்லாமல் கொள்ளையடிக்க வைக்கும் தனது திட்டத்தை மத்திய அரசு புதுவித தெம்புடன் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளது.
எனவே மாற்றுத்திறனாளிகள் பல ஆண்டுகளாக போராடி பெற்றுள்ள இந்த சிறிய பாதுகாப்பு சரத்துக்களைக்கூட வலுவழக்க செய்ய மத்திய பாஜக அரசு ஈடுபட்டிருப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என மோடி அரசை கேட்டுக்கொள்கிறோம். மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்படி பாதுகாப்பு வழங்க அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, “தெய்வப் பிறவிகள்-திவ்யாங்” என பெயர் சூட்டி ஏமாற்றக்கூடாது.இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர்-3 இயக்கம் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த அமைப்புகளும் இந்த கூட்டறிக்கையில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.