tamilnadu

img

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர், தந்தை மீது வழக்குப் பதிவு

சென்னை:
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில்  கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மீதும், அவரது தந்தை வெங்கடேசன் மீதும், 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வரிடமும் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது. 

 மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சேர்ந்த தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா  குடும்பத்துடன் தலைமறைவாகியிருந்தார். இவர்களை திருப்பதி மலையடிவாரத்தில் தனிப்படை போலீசார் புதனன்று கைது செய்தனர். இவர்களிடம் சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நள்ளிரவில் தேனி அழைத்துச் செல்லப்பட்டனர்.  சமதர்மபுரத்தில் உள்ள அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் உதித் சூர்யா மற்றும் அவரது தாய், தந்தையிடம் விசாரணை நடத்தினர். மாணவரின் தந்தை வெங்கடேசன், சென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஆவார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும், வெங்கடேசனும் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது. தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிபிசிஐடி எஸ்பி தலைமையிலான போலீசார் சோதனை  நடத்தி, சில மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே உதித் சூர்யா மீதும், அவரது தந்தை வெங்கடேசன் மீதும் ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல், சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.