சென்னை:
புதுச்சேரி, தில்லி, ஜம்மு,காஷ்மீர் உள்ளிட்ட 9 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்களை தனியார்வசம் ஒப்படைக்கப் போவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மே16 சனிக்கிழமையன்று அறிவித்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
மின் விநியோக நிறுவனங்களை தனியார்மயக்கும் மத்திய பாஜக அரசின் முடிவைக் கண்டித்து தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐக்கிய பொறியாளர் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 16 சங்கங்களின் சார்பில் மாநிலம் முழுவதும் செயற் பொறியாளர் அலுவலகங்கள், கோட்ட அலுவகங்கள் என 3,300 பிரிவு அலுவலகங்களில் மே 18 திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சாரவாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சசிகுமார் (தொமுச), தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், பவர் இன்ஜினியரிங் ஆர்கனிசேஷன் பொதுச் செயலாளர் கே.அருட்செல்வன், சுப்பிரமணி (தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம்), சம்பத் (பொறியாளர் சங்கம்), ஜெயந்தி (பொறியாளர் கழகம்), தனசேகர் (மின்சார தொழிலாளர் சம்மேளனம்), ஏ.சேக்கிழார் (டி.என்.இ.பி. சம்மேளனம்), கல்யாண சுந்தரம் (பொறியாளர் யூனியன்), மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மக்களுக்கு கட்டண உயர்வு-கார்ப்பரேட்டுகளுக்கு லாபம்
போராட்டம் குறித்து ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 16 ஆம் தேதி நிதியமைச்சர் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான மின் விநியோக நிறுவனங்களை தனியார்மயமாக்கப் போவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து 17ஆம் தேதி அனைத்து மாநில மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கப் போவதாக அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவி வரும் வேளையில் மக்கள் இதை கண்டு கொள்ள மாட்டார்கள், தொழிலாளர்கள் போராட முன்வர மாட்டார்கள் என இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த அறிவிப்பை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள மின்சார ஊழியர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள் என அனைவரும் போராட்டக் களத்திற்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்ட மசோதா நகல் குறித்து மாநில அரசுகள் கருத்து கூற வேண்டியுள்ளது. தமிழக அரசு சட்ட திருத்தத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவித்துள்ளது. மேலும் சட்டமசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. புதுச்சேரி முதல்வரும் இந்த சட்ட மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மின்சார வாரியங்களும் தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டியுள்ளது. இதற்கு ஜூலை மாதம் 5ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. இதற்கிடையே 16 ஆம் தேதி யூனியன் பிரதேசங்களிலும், 17ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் உள்ள மின் பகிர்மான வட்டங்கள் தனியாருக்கு வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த சட்ட திருத்தத்தால் சாமனிய மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இந்த சட்டம் முழுக்க முழுக்க தனியார்மயமாக்க வேண்டும் என்று கூறுகிறது. ஏழை எளிய மக்கள் என்ன கட்டணத்திற்கு மின்சாரத்தை வாங்குகிறார்களோ அதே விலைக்கு பெரிய முதலாளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். குடிசைகளுக்கான, சிறு குறுந் தொழில்களுக்கான, விவசாயத்திற்கான மானிய மின்சாரம் கிடையாது. இதனால் விவசாயிகள், நெசவாளர்கள், சிறு குறுந் தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கடுமையாக மின் கட்டணம் உயரும் அபாயம் உள்ளது.
மேலும் மாநிலங்களின் உரிமையும் பறிக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 25 ஆண்டுகளான தெர்மல் நிலையங்களை மூட வேண்டும் என அமைச்சர் அறிவித்தார். தமிழகத்தில் வட சென்னை அனல்மின் நிலையம் உள்ளிட்ட 3 தெர்மல் நிலையங்களையும், நாடு முழுவதும் சுமார் 40 தெர்மல் நிலையங்கள் மூடப்பட உள்ளன. அதன் ஒருபகுதியாகவே கடந்த சனிக்கிழமை 50 நிலக்கரி சுரங்கங்களையும் தனியார்மயமாக்கும் அறிவிப்பை அமைச்சர் வெளிட்டார். இதனால் சாதாரண மக்கள் பயன் அடையப் போவதில்லை, கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன் அடையும். மேலும் அவர்கள் நினைத்த நேரத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்திக் கொள்ள முடியும். தங்கத்தை எப்படி ஏழை எளிய மக்கள் வாங்க முடியவில்லையோ அதுபோல் மின்சாரத்தையும் வாங்க முடியாத நிலை ஏற்படும்.
எனவே மத்திய அரசு உடனடியாக மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும். மின்பகிர்மான வட்டங்களை தனியார்மயமாக்கும் அறிவிப்பை வாபஸ்பெற வேண்டும். இல்லையென்றால் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களையும் திரட்டி பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.