சென்னை:
ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கும் தமிழக காவல்துறைக்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானதும், இந்தியாவை பிளவுபடுத்தக் கூடியதும், சர்வதேச அளவில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அவமானத்தை உருவாக்கக் கூடியதுமான குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல்கட்சிகளும், சமூக இயக்கங்களும், மாணவர்களும், பொதுமக்களும், அறிவுஜீவிகளும், படைப்பாளிகளும் ஒற்றை மனிதனாய் எழுந்து நின்று இந்திய தேசத்தை பாதுகாப்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டங்களை மத்திய பாஜக அரசு, காவல்துறை மற்றும் காலிகள் துணையோடு கடுமையான வன்முறைகளை ஏவி ஒடுக்க முயல்கிறது.
இந்தியாவின் பொருளாதாரம் ஏற்கனவே கடந்த 6 ஆண்டு கால பாஜக ஆட்சியின் காரணமாக பாதிப்படைந்து பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை அமலாக்க முனைவதால் இது இன்னும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும். இந்நிலையில் மத்திய அரசாங்கம் இந்திய நாடு முழுவதும் கடுமையான ஒடுக்குமுறையை ஏவி வருகிறது. இடதுசாரி கட்சிகள் சார்பில் இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிரான இயக்கங்களுக்கு தலைமையேற்று நடத்த சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், பிருந்தாகாரத், ஹன்னன்முல்லா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் முரட்டுத்தனமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தில்லியில் பல பகுதிகளில் இண்டர்நெட் சேவை, இணையசேவை, செல்போன் சேவை, மெட்ரோ சேவை, பஸ்போக்குவரத்து என அனைத்தும் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ளன. மத்திய பாஜக அரசின் மூர்க்கத்தனமான இந்த நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இதேபோன்று சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்றையதினம் வள்ளுவர்கோட்டம் அருகில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதேசேமயம் நாளைய தினம் பாஜக சார்பில் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நடத்துகிற ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சட்டங்களை தங்களதுசொந்த உரிமை போன்று பாரபட்சமாக பயன்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. ஒரு தேச விரோத சட்டத்தைஆதரித்து வாக்களித்துவிட்டு அதன் காரணமாக இந்தியாவிற்கு ஒரு பேரிடரை உருவாக்க துணைபோன அதிமுக அரசு, மத்திய பாஜக அரசின் வழி ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அறப்போராட்டங்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை தமிழக அரசு மதித்து நடக்க வேண்டுமெனவும் இத்தகைய இயக்கங்களுக்கு உரிய அனுமதியை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.