சென்னை:
இந்திய மாணவர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தோழர் இரா.நாராயணனின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், செவ்வஞ்சலியை யும் தெரிவித்துக் கொள்கிறோம்.இந்திய சமூகத்தில் துடிப்புமிக்க மாணவர் இயக்கமாக செயல்பட்டு வரும் இந்திய மாணவர் சங்கத்தை (எஸ்.எப்.ஐ) தமிழகத்தில் அமைத்திட அடித்தளமிட்ட ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தோழர் இரா.நாராயணனின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளித்துள்ளது.
1968 மற்றும் 1969 ஆகிய காலகட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் ஆரம்பக்கால அமைப்பானதமிழக மாணவர் சங்கத்தின் (டி.எஸ்.எப்) பொறுப்பு செயலாளராகவும், மாநிலச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தேச விடுதலைக்கு பிறகு மிகப்பெரிய வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் ஏற்பட்ட போது அப்போதைய இந்திரா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக மாணவர்களை அணிதிரட்டுவதிலும், பொருளாதார கொள்கைக்கு எதிராகவும், கல்விக்கொள்கைக்கு எதிராகவும் தத்துவார்த்த போராட்டத்தை முன்னெடுபதில் பங்காற்றியுள்ளார். தமிழகத்தில் மாணவர்களின் நலனிற்கான போராட்டத்தில் தேசஅளவில் நடைபெறும் கல்விக்கான போராட்டத்தோடு இணைத்திடும் வகையில் தேசமுழுமைக்குமான ஒரே அமைப்பாக இந்திய மாணவர் சங்கம் 1970ல் உருவாகிட காரணமாக இருந்தவர்களில் தோழர் இரா.நாராயணன் அவர்களும் ஒருவர். அவர் தற்போது தமிழகத்தில் இயங்கி வரும் தொழிலாளி வர்க்க பத்திரிக்கையான தீக்கதிரில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிட தக்க அம்சமாகும். தோழர் இரா.நாராயணன் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், சக பத்திரிகையாளர்களுக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் இரா.நாராயணன் அவர்களின் பணியையும், பங்களிப்பையும் எஸ்.எப்.ஐ தொடர்ந்து முன்னெடுப்போம் என்று சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன், செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் தெரிவித்திருக்கிறார்கள்.