சென்னை, மே 12 -துரைப்பாக்கத்தில் செயல்படும் டி.பி.ஜெயின் கல்லூரிக்கு தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.சென்னை ராஜீவ்காந்தி தகவல் தொழில்நுட்ப அதிவிரைவு சாலையில் 1972ஆம் ஆண்டு தன்ராஜ் ஃபய்டு ஜெயின் (டி.பி.ஜெயின்) கல்லூரி தொடங்கப்பட்டது. 48 வருடங்களாக அரசின் உதவித்தொகை, யுஜிசி சலுகைகளை பெற்று வருகிறது.இந்த கல்லூரியில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் செயலாளராக உள்ள அரிஷ் எல் மேத்தா,சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளின் மூலம் இந்தக் கல்லூரியை தனியார் கல்லூரியாக மாற்றி வருகிறார். எனவே, தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம், பிரிவு 14ஏ-வின் கீழ் கல்லூரிக்கு தமிழக அரசுதனி அலுவலரை நியமிக்க வலியுறுத்தி பேராசிரியர்கள் வெள்ளியன்று (மே 10) சோழிங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய பல்கலைக் கழக பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் என்.பசுபதி பேசுகையில், “கல்லூரியிலிருந்து 50க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அந்த பணியிடங்களை நிரப்பாமல், குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளனர். கல்லூரியின் பேராசிரியர்களுக்கான பொறுப்பு அதிகாரியாக உள்ள முனைவர் எம்.சக்திவேல் முருகன், பேராசிரியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்” என்று குற்றம்சாட்டினார்.“எனவே, தமிழக அரசு கல்லூரிக்கு தனி அலுவலரை நியமித்து நிர்வாக சீர்கேடுகளையும், நிதி முறைகேடுகளையும் சரி செய்ய வேண்டும். சென்னை பல்கலைக் கழகம் கல்லூரிக்கு வழங்கிய இணைப்பு விதிகளில் நடைபெற்றுள்ள விதிமீறல்களை ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தினார்.