tamilnadu

பொறியாளர்களுக்கு வேலை கிடைக்கும் சூழலை ஏற்படுத்துங்கள்... தகவல் தொழில்நுட்பத்துறைக்கு முதல்வர் அறிவுரை....

சென்னை:
பொறியியல் படிப்பை நிறைவு செய்வோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென தகவல் தொழில்நுட்பத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,“அரசுத் துறைகளில் காகிதப் பயன்பாட்டைக் குறைத்திட மின்னணு அலுவலக மென்பொருளை பயன்படுத்த நடவடிக்கை வேண்டும்”என்றார்.“தமிழ்நாட்டில் 14 இடங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்க வேண்டும். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். மாநிலத்தில் ஒவ் வொரு ஆண்டும் சுமார் 4 லட் சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து வெளியே வருகின்றனர். அவர்கள் தகுந்த வேலைவாய்ப்பை பெற்றிட புதிய சூழலை ஏற்படுத்த வேண் டும். இதன்மூலமே மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியும்”என்றும் முதலமைச்சர் கூறினார்.

அரசுத் துறைகளின் சேவைகளை இணைய வழியில் பெற்றிடும் வகையில் குறிப்பாக தமிழ் மொழி வாயிலாகக் கிடைத்திட வகை செய்திட வேண்டும். உலகத் தமிழர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே இணைய வழித் தமிழ் மொழியைக் கற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.இந்தக் கூட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.