tamilnadu

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென்று தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்றி உரிமையாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தியில் விசைத்தறி 54.6 சதம் அளவிற்கு பங்களிப்பு செய்கிறது. இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் ஒன்னரை லட்சம் தறிகள் கூலிக்கு நெசவு செய்யும் உரிமையாளர்களை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 10.48 லட்சம் தொழிலாளர்களும், அதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சரிபாதி தொழிலாளர்களும் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். மின் கட்டண உயர்வு, நூல் விலை உயர்வு போன்ற காரணங்களால், இந்த பிரிவினருக்கு வழங்க சம்மதித்து செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் கூலி உயர்வினை நீண்ட காலமாக பெரும் உற்பத்தியாளர்கள் அமலாக்கவில்லை; மாறாக, குறைத்து உள்ளனர் ; இது நியாயமற்றதாகும்.

நியாயமான கூலி கிடைக்கவில்லை என்ற காரணத்தால் பல்லடம், சோமனூர் பகுதிகளில் 50000-த்திற்கும் மேற்பட்ட தறிகள் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  மிகுந்த கொடுமையான இந்த சூழலை தமிழ்நாட்டின் ஜவுளித்துறை அமைச்சரும், முதல்வரும் தலையீடு செய்து தடுத்திடவும், தொழில் பாதுகாப்பை ஏற்படுத்தவும் வேண்டும்.

தமிழ்நாட்டில் இது போன்று தொழிலாளர்களாக உள்ள சுய தொழில் பிரிவினர் அதிகம். அவர்களின் பொருளாதாரப் பங்களிப்பும் அதிகம். இதை கவனத்தில் கொண்டு வேலை நிறுத்தம் செய்து வரும் இந்த சிறு குறு உற்பத்தியாளர்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

ஒன்றிய பாஜக அரசின் ஜி.எஸ்.டி உள்ளிட்ட கொள்கைகள் தமிழ்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்தி வரும் கொடுமையான பாதிப்புகளுக்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்திட போராடும் தொழிலாளர்களை பாதுகாப்பதுடன் இணைந்தது என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

எனவே, வேலை நிறுத்தம் செய்து வரும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.