தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர் விருது” வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன் முதல் விருது நூற்றாண்டு காணும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்விருதினை அறிவித்த தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் என். சங்கரய்யா தனது 80 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் இந்திய விடுதலைக்காக போராடி 8 ஆண்டு காலம் சிறையிலும், மூன்றாண்டு காலம் தலைமறைவாகவும் வாழ்ந்தவர். உழைப்பாளி மக்களின் நலன்களுக்காக வாழ்நாள் முழுவதையும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு தமிழ்மொழிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் குரலெழுப்பியவர்.இந்த விருதை ஏற்றுக் கொண்ட தோழர் என். சங்கரய்யா அவர்கள் இவ்விருதிற்காக வழங்கப்படும் ரூபாய் 10 லட்சத்தை தமிழக அரசின் “முதலமைச்சர் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு” வழங்குவதாக அறிவித்துள்ளார்.தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு இந்த விருதை தமிழக அரசு வழங்கியிருப்பதானது அவரைப் போன்று மக்கள் சேவையில் தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனைகளை இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்துவதாக அமையும் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து...