tamilnadu

அதிமுக அரசு மீது விசாரணை நடத்த சிபிஎம் கோரிக்கை... 1ம் பக்கத் தொடர்ச்சி.....

தொகையை வழங்க மறுத்து வரும் நிலையில் சட்டப் பொருளாதார வல்லுனர்களை கொண்டு கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கப்படும் எனும் புதிய முன்மொழிவு தமிழக மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

அலங்கோல சாலைகள்
நகர்ப்புற மற்றும் கிராமப்புற கட்டமைப்பு மேம்பாடு என்பது மிக முக்கியமாகும். நெடுஞ்சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கக் கூடியதாகும். ஆனாலும், கடந்த 10 ஆண்டுகளில் கந்தர்வகோட்டை தொகுதி முழுவதும் ஊராட்சி ஒன்றியமற்றும் கிராமப்புற சாலைகள் சிதைந்து கிடக்கிறது. அதனை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும்.

நோக்கத்தை சிதைத்த அதிமுக!
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் படி தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் சராசரியாக ஒருவருக்கு 45 நாட்கள் மட்டுமே வேலை கொடுத்தனர். இந்ததிட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிட்டனர்.  2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளின் சமூக தணிக்கையில் ரூ. 4000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளன. அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே நேரத்தில், துயரத்திலிருந்து ஏழை மக்களை பாதுகாக்க, விவசாயத் தொழிலாளர் களுக்கு 150 நாட்களாக உயர்த்துவதும், ஒரு நாள் கூலியை ரூ. 300 ஆக உயர்த்தவும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கதாகும்.பேரூராட்சிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். விவசாயத் தொழிலை மட்டுமே நம்பி அதில் ஈடுபட்டுள்ள 2 கோடிவிவசாயத் தொழிலாளர்க ளின் நலன்களை பாது காப்பதற்கும், ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், திட்டங்களை உருவாக்க வேண்டும். அதேநேரத்தில் குறைந்தபட்சம் 200 நாட்களாகவும், தினக்கூலி ரூ. 500 ஆக உயர்த்துவதற்கு ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

வல்லுநர் குழு
ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழகத்தில் அமைத்து தனித்துவமான கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்றஅறிவிப்பை  தமிழகமே வரவேற்கிறது. இதற்குஒரு வல்லுநர்குழு அமைக்க கேட்டுக் கொள்கி றேன். அதேநேரத்தில் லட்சக்கணக்கான ஏழைகுடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கல்விக் கடனை ரத்து செய்யவும் முதல்வர் பரிசீலிக்க வேண்டும். 

நிதிவருவாய் அதிகரிக்க...
கொரோனா காலத்தில் கல்வி இடைநிற்றல், புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகரிப்பு, குழந்தை திருமணம் அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்க வேண்டும். கடுமையான நிதி நெருக்கடிபற்றாக்குறை இருக்கும் நிலையில், நிதி வருவாயை பெருக்குவதற்கு கனிமத் தொழில்கள் மற்றும் சுரங்கத் தொழில்கள் உள்ளிட்ட தொழில்களை தமிழக அரசே நேரடி நிர்வாகத்தின் கீழ் நடத்துவது தமிழக மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கி விடும்.

போராடும் விவசாயிகளுக்கு நம்பிக்கை!
ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கிற மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய ஒன்றியம் முழுவதும் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டங்களை நடத்தி வரும் விவசாயி களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், இந்தியஒன்றியத்திற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டுவரலாற்றில் முதன் முறையாக, 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையாக ஆகஸ்ட் 14 அன்று சட்டப்பேரவையில் வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்திருப்பது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை யாகும். வேளாண்மை துறைக்கு 34,220 கோடி ரூபாய் ஒதுக்கியது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொள்முதல் விலை உயர்வு!
அனுமதியின்றி பனை மரம் வெட்ட தடை விதிப்பு, ரேசன் கடைகளில் சிறு தானியம் விற்பனை, நெல் மற்றும் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிப்பு செய்திருப்பது பாராட்டத்தக்கது.  ஒன்றிய அரசை விட கரும்புக்கு கூடுதலாக ஊக்கத் தொகை அறிவிப்பு செய்திருப்பது பாராட்டக் கூடியதாகும். தேர்தல் காலத்தில் டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவும், 10க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகளும், ஆலை தொழிலாளர்களும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். ஆகையால், தமிழக அரசேஏற்று நடத்த வேண்டும். நிலுவையில் உள்ள சுமார் ரூ. 1,500 கோடி தொகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

அரசு நிலத்தை விற்ற அதிமுக!
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அருகே 1000 ஏக்கர் பரப்பளவில் 1967ஆம் ஆண்டுஅண்ணா பண்ணை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனை அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில்அண்ணா பன்முக வேளாண் செயல் விளக்க விதைப் பண்ணையாக தற்போது மேம்படுத்தப் படும் என்ற அறிவிப்பு செய்தமைக்கு புதுக்கோட்டை மாவட்ட மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் கந்தர்வகோட்டை ஒன்றியம், வெள்ளால விடுதி எண்ணெய் வித்து பண்ணையில் நிலத்தை விற்று பண்ணை நடத்துகிற செயல் கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்துள்ளது. அதனை ஆய்வு செய்து எண்ணெய் வித்து பண்ணையை மேம்படுத்தி, தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

நீடித்து வரும் பட்டா பிரச்சனை
சுதந்திர இந்தியாவிற்கு முன்பும், பின்பும் நீண்ட காலம் பயிர் சாகுபடி செய்து வந்த இனாம் விவசாயிகளின் பட்டா பிரச்சனைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தீர்வு காணப்படாமல் நீடித்து வருகிறது. தமிழக அரசு இப்பிரச்சனைக்கு தீர்வு காண புதிய சட்டம் இயற்றி பல நூற்றுக்கணக்கான விவசாயிகளை பாதுகாக்க கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் தற்போது உள்ள பாசன நிலங்களை விட கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அதிகரிக்கப்படும் எனவும், சாகுபடி பரப்பை 60 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும், 10 லட்சம் ஹெக்டேர்இருபோக சாகுபடி நிலங்களை 20 லட்சம்ஹெக்டேராக உயர்த்துவதற்கான நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயி களுக்கு மிகப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.பாசன நிலங்களுக்கு தேவையான தண்ணீர் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், 1,50,000 ஹெக்டேர் நிலபரப்பில் தண்ணீர் பாசன வசதி உருவாக்கப்படும் என அறிவித்திருப்பது தமிழ்நாட்டு விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு பேருதவியாக இருக்கும். 

கழனியை நோக்கி திரும்பும் முயற்சி
நீராதாரத்தை அதிகரித்திடவும், விவசாயத்தை பாதுகாக்க காவிரி, வைகை, குண்டாறுஇணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போது தான் இளைஞர்களை ஊக்கப்படுத்துவது, “கணினியை நம்புகிற இளைஞர்களுக்கு கழனியை நோக்கி திரும்புகிற முயற்சியாக” இளைஞர்களை வேளாண்மை தொழில்முனைவோராக மாற்றுவதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டி ருப்பதை பாராட்டுகிறோம்.  அதேநேரத்தில் லட்சக்கணக்கான குத்தகை விவசாயிகள் இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்படுகிற போது நிலவரி ரத்து, இன்சூரன்ஸ் மற்றும்குத்தகை வரி பாக்கி தள்ளுபடி இல்லாமல்அவதிப்படும் பிரச்சனைக்கு  கருணாநிதி காலத்தில் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. தற்காலத்தில் இதுபோன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் தள்ளுபடி செய்யப்படாமல் நீதிமன்றங்களுக்கு செல்லுகிற நிலைமை தொடர்கிறது. இதனால் குத்தகை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குத்தகை விவசாயிகளும் பயன்படக் கூடிய முறையில்  முதல்வர் தலையீடு செய்து தீர்வுகாண வேண்டுகிறேன்.

கோவில் நிலப் பிரச்சனை...
கோவில் நிலங்கள் வசதி படைத்தவர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை அகற்றுவது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் ஆக்கிர மிப்புகள் அகற்றம் என்ற பெயரில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் வேறு வழியே இல்லாதஏழை மற்றும் விளிம்பு நிலை மக்கள் வாழும் இடத்திற்கு குடிமனைப் பட்டா வழங்கி முதலமைச்சர்  நம்மை பாதுகாப்பார் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.  பல்வேறு சிறப்புகளை கொண்ட நிதிநிலை அறிக்கையில் அரசுப்போக்குவரத்து, மின் ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன தொழிலாளர்களின் நலன் காக்கவும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கி பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு எம். சின்னதுரை பேசினார்.

தொகுதி மக்கள் கோரிக்கை
கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு சீமாங் சென்டர் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்து விட்டது. புதிய கட்டிடங்கள், மருத்துவ கட்டமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும். கந்தர்வகோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைத்து தர வேண்டும். கந்தர்வகோட்டை ஊராட்சியை பேரூராட்சியாகவும், கீரனூர், கறம்பக்குடி பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். விவசாயத்தை பாதுகாக்க கல்லணை கோட்டத்திலிருந்து கந்தர்வகோட்டை தொகுதிக்கு தண்ணீர் கொண்டு வரஉரிய நீர்வழித் தடங்கள் உருவாக்கவேண்டும். மிகவும் பின் தங்கியதாக இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களவை தொகுதியே இல்லாமல் உள்ளது. முன்னூறு ஆண்டுகளின் சாம்ராஜ்யமாக இருந்த தொண்டைமான் சாம்ராஜ்யத்திற்குள் இன்றைய தினம் எந்தவித அந்தஸ்சும் இல்லை என்கிற குறையுடன் நீண்ட நெடுங்காலமாகவே மக்கள்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நீர்நிலைகள்,கோவில்கள், பொது சொத்துக் கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்கிறகுறையும் இருக்கிறது. புதுக்கோட்டை மக்கள் நீர் ஆதாரத்தை மட்டுமே நம்பிவாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இரண்டு முதலமைச்சர்கள் காவிரி,வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர். முதன்முறையாக கலைஞர்தான் இந்த திட்டத்தை கொண்டு வந்து அடிக்கல்லை நாட்டி சிறப்பித்தார். அந்த திட்டத்தை  நிறைவேற்றுவதற்கு அரசு முன்வரவேண்டும்.தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் இலவசமாக கிடைக்கிறது. மின்சாரம், இடுபொருள் இலவசமாக கிடைக்கிறது. உற்பத்தி பொருள் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தஞ்சைக்கு அருகில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீர் ஆதாரம் இல்லாமல் துன்பப்படுகிறார்கள். ஆகவே, நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். 

காப்புக் காடுகள் நிறைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நிலமற்ற விவசாயத்தொழிலாளர்களுக்கு கேரள அரசைப் போன்று குத்தகை விவசாயத்திற்கு அனுமதிக்க முன்வரவேண்டும். வரலாற்று சிறப்புகளை கொண்ட சித்தனவாசல் குகை ஓவியம் இந்திய ஒன்றிய அரசின் பராமரிப்பில் இருந்தாலும் அதை மாநிலஅரசு தனது கட்டுப்பாட்டுக்குக்கீழ் கொண்டு வந்து சீரமைக்கவேண்டும். முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் மணி மண்டபப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதையும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.