விகடன் இணையதளத்தை முடக்கிய மோடி அரசின் எதேச்சதிகாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள அறிக்கை வருமாறு:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று பெயர் சூட்டி இந்திய குடிமக்களின் கைகளில் விலங்கு பூட்டியும் சங்கிலியால் பிணைத்தும் போர்க் குற்றவாளிகளைப் போல ராணுவ விமானத்தில் தொடர்ச்சியாக நாடு கடத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம். பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும் போதே இந்த அநியாயம் அரங்கேறுகிறது. இவ்வாறு இந்தியக் குடிமக்களை அவமதிப்பதற்கு குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட அங்கு சென்ற மோடியினால் தெரிவிக்க முடியவில்லை. மாறாக, இவ்வாறு அனுப்பப்படுபவர்களை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று மறைமுகமாக இந்த காட்டுமிராண்டித்தனமான நாடு கடத்தலுக்கு ஒப்புதல் வழங்குகிறார் பிரதமர் மோடி.
இந்திய குடிமக்களை இவ்வாறு அநாகரிகமாக நடத்துவதைக் கண்டித்தும், பிரதமர் மோடியை விமர்சித்தும் ஆனந்த விகடன் இணைய ஏடு கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஒன்றிய அரசு ஆனந்தவிகடன் இணையத்தையே முடக்கி தன்னுடைய எதேச்சதிகார போக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பொய்யாக தன்னுடைய பிம்பத்தை ஊதி பெரிதாக்கிக் காட்டுவதில் ஈடுபட்டுள்ளார். பெரும்பாலான ஊடகங்களை இதற்காக ஒன்றிய அரசு வளைத்துப் போட்டுள்ளது. சமூக ஊடகங்களையும் கூட தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயல்கிறது. நியூஸ் க்ளிக் ஏடு ஒன்றிய அரசினால் வேட்டையாடப்பட்டது. 2024 இல் ஊடக சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 180 நாடுகளில் 159 இடத்திற்கு சரிந்துள்ளது. இந்தியாவில் ஊடக சுதந்திர வெளி கொஞ்சம் கொஞ்சமாக சுருக்கப்பட்டு வருகிறது.
டிரம்ப் நிர்வாகத்திடம் அடிபணிந்து ஒப்பந்தம் என்ற பெயரில் நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போடுகிறார் பிரதமர் மோடி. அமெரிக்க மதுபானத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. அடுத்து அமெரிக்க அணு உலைகளை இந்தியாவில் நிறுவவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் சொந்த நாட்டு மக்களின் சுயமரியாதையை பாதுகாக்க வக்கில்லாத பிரதமர் மோடியின் நிர்வாகம் தமது ஆட்சி மீதான விமர்சனங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முயல்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஊடக சுதந்திரத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் அராஜக நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன் இதற்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும் குரலெழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.