tamilnadu

img

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்புக்கு சிபிஎம் கண்டனம்....

சென்னை:

ஜனவரி 9 அன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில்உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண்இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின்  மாநிலச் செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரின் போது கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூண் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த செயல் அதிர்ச்சியளிக்கிறது. அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் இந்த இழி செயலுக்கு துணைபோயுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இறுதிக்கட்ட போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மையுள்ள விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால், முந்தையஆட்சியின் போதும், இப்போதைய ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சியின் போதும் இதில் எந்த முன்னேற்றமும் இல்லை.மறுபுறத்தில் மாகாண கவுன்சில்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் அந்நாட்டு அரசியல் சட்டத்தை திருத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஏற்கனவே, ஒப்புக்கொள்ளப்பட்ட உறுதிமொழிகளைக் கூட இலங்கை அரசு நிறைவேற்ற மறுக்கிறது. தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைப்பது, சிங்கள மொழிக்கு நிகராக தமிழை சமத்துவமாக நடத்துவது, மத, மொழி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.இந்திய வம்சாவளி தமிழர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இந்த கோரிக்கைகள் நிறைவேறிட ராஜீய ரீதியிலான அழுத்தத்தை இந்திய அரசு தர வேண்டியது அவசியமாகும். ஆனால், இந்திய அயல்துறை அமைச்சரின் பேச்சுவார்த்தைகளில் இதற்கு போதிய அழுத்தம் தரப்பட்டதாக தெரியவில்லை. அதேபோல, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அவ்வப்போது நடத்தி வரும் தாக்குதல்களை முற்றாக நிறுத்துவதற்கான உத்தரவாதமும் பெறப்படவில்லை.

இலங்கையில் இனியேனும் தமிழ்மக்கள் சமத்துவமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கான சூழலை உருவாக்கும் பொறுப்பு அங்குள்ள அரசுக்கு உள்ளது. அண்டை நாடு என்ற முறையிலும், அங்குள்ளஅரசியல் சூழல் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையிலும், அதற்கான முன்முயற்சிகளில் இந்திய அரசும்ஈடுபட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.