வடகிழக்கு பருவமழையினால் தென்மாவட்டங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"பெஞ்சால் புயல் மற்றும் அதீத மழைப்பொழிவால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன. 30 பேர் உயிரிழந்துள்ளனர், 1,69,043 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. தற்போது கடந்த இருதினங்களாக தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடமான திருச்செந்தூர் அருகே உள்ள புன்னைக்காயல் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து தனித்தீவாக மாறியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. பொதுமக்கள் தங்களது உடமைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும், அடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் போது தமிழக மக்கள் சொல்லொணா துயரங்களிலும், வேதனையிலும் மூழ்கி வருகின்றனர்.
ஏற்கனவே பெஞ்சால் புயலால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகளுக்கு தமிழக அரசு மறுசீரமைப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ரூ. 6,675 கோடி நிதி ஒதுக்கிட வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது. தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்தால் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இயற்கை பேரிடர்களால் தமிழகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதிப்புகளுக்கு முறையான நிதியினை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டி வருகிறது. ஆண்டுதோறும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக வழங்கப்பட்ட தொகையைத் தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்கியதைப் போன்ற தோற்றத்தை ஒன்றிய அரசு உருவாக்கி வருகிறது. குறிப்பாக மிக்ஜாம், பெஞ்சால் புயலுக்கு இதுவரையில் ஒன்றிய அரசின் சார்பில் எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை. இது தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சிக்கும் செயலாகும்.
எனவே, ஒன்றிய பாஜக அரசு இனியும் வேடிக்கை பார்க்காமலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படாமலும் பெஞ்சால் புயல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு கோரியுள்ள நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழையினால் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.