tamilnadu

img

எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு விரக்தியின் வெளிப்பாடு! – பெ.சண்முகம்

திமுகவுடன் இணைந்து செயல்படும் கட்சிகள் கரைந்து போகும் என்று ஊடகங்களிடம் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது, அவரின் விரக்தியின் வெளிப்பாடு என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

“திமுகவுடன் இணைந்து செயல்படும் கட்சிகள் கரைந்து போகும் என்று ஊடகங்களிடம் புலம்பியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய பேச்சு, யாரும் அணிசேர வரவில்லையே என்ற விரக்தியின் வெளிப்பாடாகும்.

இந்தியாவிற்கும், தமிழ்நாட்டுக்கும் ஆபத்தாக எழுந்திருக்கும் பாஜகவின் நவ-பாசிச போக்குகளை எதிர்கொண்டு, மக்கள் நலனை காப்பதற்காக சி‌பிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகள் பரந்துபட்ட ஒற்றுமையை உருவாக்குகின்றன. தமிழ்நாட்டில் அத்தகைய ஒற்றுமை நாட்டுக்கே முன் மாதிரியாக அமைந்துள்ளது.

பாஜக எதிர்ப்பில் உறுதி காட்டியபடியே, கார்ப்பரேட் ஆதரவு பொருளாதார கொள்கைகளையும் எதிர்த்து நிற்கும் இடதுசாரிக் கொள்கைகளுக்கு புதிய வீச்சு உருவாகி இருப்பதை மதுரையில் நடந்து முடிந்த சிபிஎம் அகில இந்திய மாநாடு உலகிற்கே எடுத்துக் காட்டியது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் இது கண்ணில் படாமல் இருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது.

அமித்ஷாவின் கைவிரல் அசைவிற்கேற்ப ஆடும் பொம்மலாட்டமாக,  அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள நிலைமை கண்டு, அக்கட்சி தொண்டர்கள் கவலைப்படுவது அண்ணன் எடப்பாடிக்கு தெரியுமா?”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.