சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் ஆகியோர் திங்களன்று (17.05.2021) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கொரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கினர்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைப்பார்கள் என்றும் தெரிவித்தனர்.இச்சந்திப்பின் போது, நாட்டையே உலுக்கிக் கொண்டுள்ள கொரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற தங்களது தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வரும் சவால்கள் நிறைந்த போராட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, தமிழக மக்களை பாதுகாக்க தங்கள் அரசுமேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கை களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்முழு ஒத்துழைப்பினை அளிப்போம் என்பதையும் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் பொதுமுடக்கத்தால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள சூழ்நிலையில் நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் கொடுத்துள்ள கடன்களுக்கான தவணைகளை கட்ட வேண்டுமென பல நெருக்கடிகளை கொடுத்து வருவதால் பெண்கள், சிறு வியாபாரிகள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் உள்ளிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்; எனவே இந்நிறுவனங்களின் கடன் தவணைகளை கொரோனா காலம் முடியும் வரை வசூலிக்கக் கூடாது என தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தினர். உடனடியாக தமிழக முதலமைச்சரும், அதிகாரிகளை அழைத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் கடன் வசூலிப்பதை உடனடியாக நிறுத்துவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தெரிவித்தார்.