சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாளை முதல் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சேலம் போன்ற மாநகராட்சியில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் சில மாவட்டங்களில் நாளை ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது," தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி 94 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 960 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கொரோனா பாதிப்பிலிருந்து 52 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு 835 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் 495 பேருக்கு கொரோனா பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்" எனக் கூறினார்.