சென்னை:
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவரின் தந்தை பாலகிருஷ்ணன் சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவில்,கொரோனா பொதுமுடக்கம் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தனித்தேர்வர்களுக்கு வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தனி தேர்வு எழுதும் அனைத்துமாற்றுத்திறனாளி மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தார். அப்போது, மனுதாரர் தரப்பில் தனித்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு நடைமுறைகளையும் அறிவிக்காமல் 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.கொரோனா தொற்று முழுமையாக நீங்கும் வரை தனிதேர்வர்களுக்கானத் தேர்வைதள்ளிவைக்க வேண்டும் என வாதிடப்பட்டது.இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தனித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். தேர்வின் போது தனிமனித இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.