சென்னை :
கொரோனா தொற்றில் ஒருவருக்கு "நெகடிவ்" என முடிவு வந்தால் அது நிரந்தரமானது என கருதமுடியாது. அவருக்கு எப்போது வேண்டுமானலும் முடிவு "பாசிடிவ்"-ஆக மாற வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார் தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.
கொரோனா நிலவரம் குறித்து திங்கட்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஞாயிற்றுக்கிழமை வரை கொரோனா தொற்று எண்ணிக்கை 1075 இருந்தது. திங்களன்று 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 98 பேரில் 91 பேருக்கு நேரடியாக பாதிப்பு உருவாகியுள்ளது. மீதமுள்ள 7 பேர் பாதிப்புடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூரில் 18 பேர், கரூரில் 15 பேர், மதுரையில் 14 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது திங்களன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 31 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு கண்காணிப்பில் 33,850 பேர் உள்ளனர். அரசுக் கண்காணிப்பில் 136 பேர் உள்ளனர், 28 நாள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் 63,380 பேர். திங்களன்று 12,746 பேருக்கு ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றை ஆய்வு செய்ய அரசு சார்பில் 25 ஆய்வகங்களும், தனியார்துறையில் ஒன்பது ஆய்வகங்களும் உள்ளன. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பாதுகாப்பு சாதனங்களும் உரிய அளவில் உள்ளது. தேவைப்படும்போது ஆர்டர் செய்யவும் அரசு தயாராக உள்ளது.
கொரோனா நோய் தொற்றை தடுப்பதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. இறப்பை குறைப்பதுதான் எங்கள் நோக்கம். ரேபிட் கிட்-கள் ஓரிரு நாளில் வந்துசேரும். பிஆர்கிட்-களை பயன்படுத்தி கொரோனா தொற்றை உறுதி செய்து வருகிறோம்.கொரோனா தொற்றில் ஒருவருக்கு "நெகடிவ்" என முடிவு வந்தால் அது நிரந்தரமானது என கருதமுடியாது. அவருக்கு எப்போது வேண்டுமானலும் முடிவு "பாசிடிவ்"-ஆக மாற வாய்ப்புள்ளது. அதைத் தவிர்ப்பதற்காகத்தான் 28 நாட்கள் தனிமைப்படுத்துதலை கட்டாயமாக்கியுள்ளோம்.