tamilnadu

செய்யாற்றில் தொடரும் மணல் கடத்தல்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருவண்ணாமலை, ஜுன் 19- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதி செய்யாற்றில் தொடர்ந்து நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் விவசாயத்தையும்,  கால்நடை வளர்ப்பையும் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். கிராம மக்களுக்கு செய்யாற்று படுகையில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த நீராதாரத்தை சிதைக்கும் வகையில், பல ஆண்டுகளாக செய்யாற்று படுகையில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

மணல் கொள்ளையை தடுக்க காவல்துறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை என பல்வேறு துறைகள் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இந்த மணல் கடத்தல் குறித்து புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காவல் துறையினரின் ஆசியோடு மணல் கொள்ளை நடப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மணல் கடத்தலை தடுக்க  ஆற்றுப் பகுதிக்கு செல்லும் பாதையில் பள்ளம் வெட்டி, கற்கள் நடப்பட்டது. ஆனால் மணல் கடத்தல்காரர்கள் அந்த பள்ளத்தை மூடிவிட்டு மணல் கடத்தலை தொடர்கின்றனர். கடந்த ஆண்டு இந்த மணல் கடத்தலை தடுக்க முயன்ற போது காவல் உதவி ஆய்வாளர் தயாளன் கீழே விழுந்ததில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சௌந்தரராஜன் என்பவர் இந்த மணல் கடத்தலை தடுக்க, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ட்ரோன் கேமரா மூலம் மணல் கடத்தலை  தடுக்கலாம் என்று அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.