சென்னை, டிச. 20- `நீரிழிவு நோயாளிகள் 100 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ்வது சாத்தியம்’ என்னும் நிகழ்ச்சியை டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் நடத்தியது. இந்த நிகழ்ச்சியின்போது அம்மையம் இது தொடர்பாக சமீபத்தில் நடத்திய ஆய்வு பற்றிய தகவல்களையும் வெளியிட்டது. சரியான உடல்நல பராமரிப்பு, உடற்பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனை காரணமாக 325க்கும் மேற்பட்ட இந்தியர்கள் 90 வயதைத் தாண்டி நீரிழிவு நோய் இருந்தபோதிலும் நிலையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பதைக் காட்டும் ஒரு வரலாற்று தருணமாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நீரிழிவு நோயை வெற்றிகரமாக எதிர்த்து போராடிய 90 முதல் 99 வயதிலான நபர்கள் பாராட்டப்பட்டனர். மேலும் அவர்கள் நீரிழிவு தொடர்பான சவால்களை எவ்வாறு வெற்றிகரமாக முறியடித்தார்கள் என்பது குறித்து தங்கள் அனுபவத்தை இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.முன்னாள் தலைமைச் செயலர் சபாநாயகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக இருந்த டாக்டர் எஸ்.வி. சிட்டிபாபு 60 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வாறு நீரிழிவு நோயை சமாளித்து நிர்வகித்து வருகிறார் என்பது குறித்த வீடியோ இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.