சென்னை, செப்.2- சென்னை ராயபுரம் புனித சேவியர் தெருவில் அறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட நூலகம் செயல்படுகிறது. சேக் மேஸ்திரி தெரு, பெரிய தம்பி தெரு உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த நூலகத்தை பயன்படுத்தி வந்தனர். தினசரி காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் இந்த நூலகத்திற்கு வந்து படித்து செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த நூலகம் பழுதடைந்ததால் கடந்த ஓராண்டுக்கு முன்பு மூடப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் ராயபுரம் எம்எல்ஏவும், மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமாரிடம் நூலகத்தை புதுப்பித்து தரக்கோரி மனு அளித்தனர். ஆனால் அவர் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், நூலக கட்டிடம் பழுதடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால், இந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, அரசு கவனத்தில் கொண்டு இந்த நூலக கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீண்டும் நூலகம் நடத்த வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.