சென்னை:
குடியுரிமை திருத்த மசோதா பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியை திரட்டும் முயற்சி என்று பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குடியுரிமை திருத்த மசோதாவை பாஜக அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. பெரும் பான்மையின் அடிப்படையில் இது நிறைவேறலாம். மாநிலங்களவையிலும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற முயற்சி செய்யும்.
இந்த சட்ட திருத்தம் வெளிநாடுகளில் இருந்து தஞ்சம்புகுந்த இஸ்லாமியர்களை தவிர்த்து மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இதன் மூலம் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி பெரும்பான்மை மக்களை மத ரீதியாக திரட்டி
வாக்கு வங்கியை விரிவுபடுத்த முயற்சிக்கிறார்கள். இது மக்களிடம் பிளவை ஏற்படுத்தும்.அரசியல் அமைப்பு சட்டத்துக்கு இது எதிரானது. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாகும். இந்த மோசமான மசோதாவை தாக்கல் செய்யும்
மோடி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.பொருளாதார வீழ்ச்சி, வேலை இல்லா திண்டாட்டம், உற்பத்தி குறைவு, வெங்காய விலை உயர்வு போன்ற பிரச்சனைகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதை திசை திருப்புவதற்காக பாஜக
அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. மோடியின் இந்த தந்திரத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.