tamilnadu

img

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை, எழிலகத்தில் 5.12 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22-08-2024) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை, எழிலகத்தில் 5.12 கோடி ரூபாய் செலவில் 10,000 சதுர அடி பரப்பில் 24 மணி நேரமும் செயல்படும் பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மையமாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தினை திறந்து வைத்தார்.

விவசாய பெருமக்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பெருமழை, வெள்ளம் போன்ற பேரிடர்கள் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் சென்றடைவதை உறுதி செய்வது, முன்கூட்டியே வானிலை எச்சரிக்கைகளை வழங்கிட வானிலை கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது, வெள்ளத் தணிப்பு திட்டங்களைச் செயல்படுத்துவது போன்ற பேரிடர் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில், பொது மக்களுக்குப் பேரிடர் முன்னெச்சரிக்கை வழங்கும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 1400 தானியங்கி மழைமானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையங்கள், ராமநாதபுரம் மற்றும் ஏற்காடு பகுதியில் 2 ரேடார்கள் அமைக்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதோடு, பல்வகை பேரிடர் முடிவு ஆதார அமைப்புகளையும் (Multi Hazard Decision Support System) ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் மழை, புயல், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கம் ஆகியவை குறித்தான முன்னெச்சரிக்கை தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கும், இதர துறைகளுக்கும், பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவித்து வருகிறது. பேரிடர் மேலாண்மையின் புயல் மற்றும் பருவமழைக் காலங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் வருகை தந்து, உயர் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசனை செய்து, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட்டு வருகிறார்.

24 மணி நேரமும் செயல்படும் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் 10,000 சதுர அடி பரப்பில் 5.12 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டு முதல்வரால் இன்றைய நாள் திறந்து வைக்கப்பட்டது. இந்த மையத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, இம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் விளக்கினார்.