சென்னை,பிப்.25- தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 5ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 40 கட்சிகளுக்கு அழைப்பு விடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் 8 தொகுதிகள் குறைக்கப்படுவதால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே உரிமைப் போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 31ஆக குறையும் அபாயம். இந்தியாவின் முக்கிய இலக்கான மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால், மக்கள்தொகை குறைவாக இருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையும் குறையும் சூழல் உள்ளது.இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய கவலை அல்ல. மாநில உரிமை சார்ந்தது. அதிக எம்.பி.க்கள் இருந்தால் தான் நீட், மும்மொழிக் கொள்கை, நிதி பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்க முடியும் என முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.