சென்னை, ஏப். 3- சென்னையில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந் திரா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் புதனன்று (ஏப். 3) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தாமோதரன், கராத்தே தியாகராஜன் (காங்கிரஸ்), ஆறுமுக நயினார், க.பீம்ராவ், (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ) வீரபாண்டியன் டி.எம்.மூர்த்தி (இந்திய கம்யூனிஸ்ட்) , ஆர்.எஸ்.பாரதி எம்பி, என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன் (திமுக), அமைச்சர் ஜெயக்குமார், பாபு முருகவேல் (அதிமுக) சந்திரன் (தேமுதிக) திருமலைசாமி (பாஜக) உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளுடனும் தேர்தல் ஆணையர்கள் 10 நிமிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் 4 மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்ற வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தேர்தல் ஆணையர்களிடம் மனு அளிக்கப்பட்டது.பின்னர் ஆறுமுக நயினார், க.பீம் ராவ் ஆகியோர் அந்த மனுவை விளக்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது:சென்னை, திருவண்ணாமலை,சேலம், மதுரை ஆகிய 4 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் எதையும் இவர்கள் அமல் படுத்துவதில்லை. எனவே அவர் களை மாற்ற வேண்டும். பொதுத் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மீதமுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏன் தேர்தல் நடத்தவில்லை என எந்த விளக்கத்தையும் இதுவரை கூறவில்லை. எனவே தற்போது காலியாக உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதி உள்ளிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும். மதுரை, கோவை தொகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநிலம் முழுவதும் தேர்தலில் பண ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் பறக்கும் படை எதிர்கட்சிகளை மட்டும் குறி வைத்து சோதனை நடத்துகிறது. பணத்தை எந்த கட்சி விநியோகம் செய்தாலும் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வீதி வீதியாக மக் களை சந்தித்து வாக்கு சேகரிக்கவும், பொதுக்கூட்டம் நடத்தவும் எதிர் கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் ஆளும் கட்சியினருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப் படவேண்டும் என வலியுறுத்தினோம்.பாரதி புத்தகாலயத்தில் ரபேல் ஊழல் புத்தக வெளியீட்டை நாங்கள் தடுக்கவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு கூறுகிறார். அப்படியென்றால் மாவட்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவு இல்லாமல் பறக்கும் படையைச் சேர்ந்த கணேசன் புத்தகங்களை பறிமுதல் செய்ய வாய்ப்பில்லை. எனவே உரிய விசாரணை நடத்தி தவறு இழைத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பத்திரிகைகள் குறிப்பிட்ட கூட்டணி குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடுகின்றன.
கோவையில் பாஜவுக்கு வரிந்து கட்டிக்கொண்டு எழுதி வரும் ஒரு நாளிதழ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்று திட்டமிட்டு பொய் செய்தி வெளியிட்டது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் அவர் நடவடிக்கை எடுக்காததால் நாங்கள் நீதிமன் றத்திற்கு செல்லவேண்டிய நிர்ப் பந்தத்திற்கு ஆளானோம்.பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அதுகுறித்த பட்டியலை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அளிக்கவேண்டும். தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தி முடிக்க ஜனநாயகத்தின் மீது நம் பிக்கை கொண்டுள்ள பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், பாஜக மற்றும் அதிமுகவிற்கு உதவும் வகையில் மத்திய வருமான வரித் துறை அதிகாரிகள் திமுக உள்ளிட்ட எதிர்கட்சி வேட்பாளர் களை குறி வைத்து சோதனை நடைபெறுகிறது. ''இதுவரை 12 புகார் களையும், காவல் அதிகாரிகளின் பட்டியலையும் அளித்துள்ளோம். பல அதிகாரிகள் ஆளுங்கட்சியின் ஏஜெண்டுகள்போல் செயல்படுகிறார்கள். அவர்களைத் தேர்தல் பணியில் அனுமதித்தால் தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை. எனவே இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியறுத்தினோம் என்றார்.
குறிப்பாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது குட்கா ஊழல் வழக்கு உள்ளது. அவருக்குப் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையில் காவல்துறை இயங்கினால் நியாயம் கிடைக்காது என்பதால் அவரை மாற்ற வேண்டும் என்றும் நியாயமான தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. முதல்வரே ராணுவ வீரர்களின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்கிறார் என்பது குறித்தும் புகார் அளித்துள்ளோம். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பினாமி சபேசன் என்பவரது வீட்டில் ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய் யப்பட்டுள்ளது. அதற்குரிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. ஒரு கல்வியாளர் வீட்டில் ரூ.5000 கோடி பதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அதுகுறித்தும் புகார் கொடுத்துள்ளோம். அதன்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.