tamilnadu

img

கேசவ விநாயகத்திற்கு சம்மன் அனுப்ப முடிவு!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
மக்களவை தேர்தலின் போது, கடந்த ஏப்ரல் 6 அன்று சென்னையில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில்,  சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள்  ஆகிய 3 பேர், உரிய ஆவணங்களின்றி 4 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்டனர். இதையடுத்து அந்த நபர்களை கைது செய்த காவல்துறையினர் தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூன்று நபர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள பல கோடி மதிப்பிலான ‘ப்ளூ டைமண்ட்’ என்ற நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்வதாகவும், இந்த பணத்தை தேர்தல் செலவுக்காக நயினார் நாகேந்திரன் எடுத்து வரச் சொன்னதாகவும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தனர். இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த நவீன், சதீஷ், பெருமாள் உட்பட 15-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து, பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து கேசவ விநாயகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தின் அனுமதியின்றி கேசவ விநாயகத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. 
இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த சிபிசிஐடி போலீசார், கேசவ விநாயகத்திடம் விசாரணை நடத்த தடையில்லை என தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் கேசவ விநாயகத்திற்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.