tamilnadu

img

ஸ்டான்சாமி மரணத்திற்கு காரணமான அமித்ஷா கைது செய்யப்பட வேண்டும்.... சென்னை ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் ஆவேசம்....

சென்னை:
ஒன்றிய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத சட்டங்களுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் போராட முன்வர வேண்டும் என சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார்.அருட்தந்தை ஸ்டான் சாமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பீமா கொரேகான் வழக்கில் கைது செய் யப்பட்டவர்களையும், அரசியல் ரீதியாக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் சென்னை பெரம்பூர் சர்மா நகர் பேருந்து நிறுத்தம் அருகே வியாழனன்று (ஜூலை 8) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் கலந்து கொண்டு பேசுகையில், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஸ்டான் சாமி தமிழகத்தைச் சேர்ந்தவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் விளிம்பு நிலை, பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்காக தொடர்ந்து போராடியவர். 9 மாதங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய தேசிய புலனாய்வு முகமை ஸ்டான் சாமியிடம் விசாரணை நடத்தினார்கள்.

உங்களுக்கு பீமா கொரேகான் என்ற இடம் தெரியாமா?, இவர் தெரியாது என கூறுகிறார். மாவோயிஸ்டுகளோடு உங்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என கேட்கிறார்கள். இவர் இல்லை எனக் கூறுகிறார். பின்னர் அவருடைய மடிக் கணினி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காவல் துறையினர் எடுத்துச் சென்றார்கள். அடுத்த சில நாட்களில் அவருடைய மடிக் கணினியில் கொரேகான் சம்பவ பயங் கரவாதிகளோடு அவருக்கு தொடர்புடைய அறிக்கை இருப்பதாகக் கூறி அவரை கைது செய்தனர்.

அமெரிக்க வல்லுநர் ஸ்டான் சாமியின் மடிக்கணியை ஆய்வு செய்து, அந்த அறிக்கை ஸ்டான் சாமி விடுத்த அறிக்கை அல்ல. அது தேசிய புலனாய்வு முகமையால் மடிக்கணினியில் செலுத்தப்பட்ட அறிக்கை என்று கூறுகிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மராட்டிய மாநிலம் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்டான் சாமி தான் பார்க்கின்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தனக்கு கைகள் செயலிழந்து விட்டது, காது சரியாக கேட்கவில்லை, என்னால் சாப்பிட முடியவில்லை எனவே என்னுடைய உடல்நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோருகிறார்.நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமையினர் ஜாமீன் வழங்கக் கூடாது என கடுமையாக எதிர்த்தனர். அவருக்கு கடந்த 9 மாதங்களாக ஜாமீன் வழங்கப்படவில்லை. சிறையில் இருக்கும் போதே கொரோனா தொற்றால் அவர் பாதிக்கப்படுகிறார். அதன்பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சில நாட்களில் இறந்து போகிறார்,.

ஸ்டான் சாமி மரணத்தைக் கண்டித்து சோனியாகாந்தி, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட 12 எதிர்க்கட்சித் தலைவர்கள்  குரல் கொடுத்தனர். ஐநா மன்றத்தின் மனித உரிமை ஆணையர் கண்டித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். உலகமே ஸ்டான் சாமி மரணத்தை கண்டிக்கும் போது, இதுகுறித்து மோடி, அமித்ஷா வாய் திறக்கவில்லை. ஸ்டான் சாமி மரணத்திற்கு யார் பொறுப்பு என ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் காவல் நிலையத்தில் 2 வியாபாரிகள் அடித்து கொலை செய்யப்படும் போது, அந்த காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டனர். காவல் நிலைய மரணம் என்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதுபோல் தேசிய புலனாய்வு முகமை கட்டுப் பாட்டில் இருந்த ஸ்டான் சாமி இறந்த தற்கு யார் பொறுப்பு. அவர் மராட்டிய மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந் தாலும், அதற்கு அந்த மாநில அரசோ, மாநில காவல் துறையோ பொறுப் பல்ல. தேசிய புலனாய்வு முகமை அமித்ஷாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எனவே ஸ்டான் சாமி மரணத் திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும், அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றார்.

ஒரு வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றால் மாநில அரசு கோர வேண்டும் அல்லது உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆனால் தேசிய புலனாய்வு முகமை ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் அந்த மாநில அரசின் அனுமதி பெற வேண்டியதில்லை. நீதிமன்ற உத்தரவு தேவையில்லை. சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தில் (உல்பா) யார் கைது செய் யப்பட்டாலும் அவரை விசாரணையின்றி வருடக் கணக்கில் சிறையில் வைத்திருக்கலாம். அந்த சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் பரத்வாஜ் உள்ளிட்ட 15 பேர் கடந்த 2 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நான் பயங்கரவாத செயலில் ஈடுபடவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவரே நிரூபிக்க வேண்டும் அது சாத்தியமானதா? இந்திராகாந்தி காலத்தில் அறிவிக்கப்பட்ட எமெர்ஜென்சியை விட மோசமான காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசு ஜனநாயக விரோத சட்டங்களை கொண்டுவரும் போது அதற்கு உடந்தையாக நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. மக்கள் விரோத மதவாத அரசை கண்டித்து இப்படிப் பட்ட கொடுமையான சட்டங்களை எதிர்த்து போராட அனைத்து தரப்பு மக்களும் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் பகுதி செயலாளர் அ.விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், விசிக மாநிலச் அமைப்புச் செயலாளர் தமிழினியன், மாவட்டச் செயலாளர் அம்பேத்வளவன், பகுதி செயலாளர் கல்தூண் ரவி ஆகியோர் பேசினர்.