சென்னை:
இந்திய ஹாக்கி அணி வீராங்கனை வந்தனா குடும்பத்தினரிடம் சாதிய வன்மத்துடன் நடந்து கொண்ட கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரை இறுதி ஆட்டத்தில் போராடி தோல்வி அடைந்தவுடன், உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் ஹாக்கி அணி வீராங்கனை வந்தனா கட்டாரியா இல்லத்தின் முன்பு சாதி இந்துக்கள் சிலர் கூடி சாதிய வன்மத்துடன் நடந்துகொண்டுள்ளனர். தேசத்தின் இந்த அவலங்களை நாட்டின் பிரதமர் வேடிக்கை பார்ப்பதை அனுமதிக்க முடியாது. பிரதமர் அல்லது துறை சார்ந்த அமைச்சர்கள் வந்தனா வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துவதும், இந்தியா உங்களுடன் இருக்கிறது என்பதை உறுதி செய்வதும்தான் வந்தனாவுக்கு இந்தியா செலுத்தும் நன்றிக்கடனாக இருக்க முடியும். அதேபோல குற்றச்செயலில் ஈடுபட்ட கயவர்கள் மீது உரிய வழக்குகள் பதியப்பட்டு கடும் தண்டனை பெற்றுத்தருவதை உத்தரகாண்ட் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். வீராங்கனை வந்தனாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. வீராங்கனை வந்தனாவிற்கு ஆதரவாகவும், சாதிவெறி சக்திகளுக்கு எதிராகவும் வாலிபர் சங்க மாவட்டக் குழுக்கள் கண்டனம் முழங்கிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.