கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் போக்சோ சட்டப்பிரிவை சேர்க்க கோரி போராட்டம் நடத்திய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், போக்சோ பிரிவை சேர்க்க வேண்டும், குடும்பத்திற்கு நிவாரணம் தர வேண்டும், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (நவ.24) சென்னை டிஜிபி அலுவலகம் அருகே மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
காவல்துறை அனுமதி மறுத்து, கடும் அடக்குமுறைகளை ஏவிய நிலையில், அவற்றையெல்லாம் மீறி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி, கே.பாலபாரதி உள்ளிட்ட 257 பேர் மீது மெரினா காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 143, 145, 290, மாநகர காவல் சட்டம் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.