tamilnadu

7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை, மே 9-ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.இதை எதிர்த்து, குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணனும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவு அரசியல் நோக்கம் கொண்டதோடு, அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது என மனுவில் முறையிடப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அமர்வில் இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில், அரசமைப்புச் சட்ட அமர்வு ஏற்கெனவே கூறிய தீர்ப்பில் அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.7 பேர் விடுதலை விவகாரம் தமிழக ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதால் அவரே முடிவு எடுப்பார் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உடனே விடுதலை செய்க!

இதுகுறித்து அறிக்கையிட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “இனியும் காலம் தாழ்த்தாமல் அந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு ஆளுநர் உத்தரவிடவேண்டும்” என்றும் வலியுறுத்தியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக அமைச்சரவை ஏற்கனவே அனுப்பிய முடிவினை ஏற்று ஏழு பேரையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக மக்களின் உணர்வையும், தமக்குள்ள அதிகாரத்தையும் உணர்ந்து ஆளுநர் இதில் நல்ல முடிவை எடுப் பார் என நம்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.