tamilnadu

img

தமிழகத்திற்கும், நாட்டு மக்களுக்கும் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்!!

சென்னை, பிப். 1 – 
நிதி நிலை அறிக்கை 2021,  நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து, கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களால்
நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கை என்பது தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் ஏமாற்றமளிப்பதோடு, வெறும் வார்த்தைகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளது.
வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்கான வருவாயை பெருக்குவதற்கு எந்தவொரு உருப்படியான ஆலோசனைகளையும் முன்வைக்காத இந்த நிதிநிலை அறிக்கை, வரும் நிதியாண்டில் மட்டும் 12 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அரசாங்கம் கடன் பெற வேண்டிய நிலையில் உள்ளது என்பதையும் முன் மொழிந்திருக்கிறது. கோவிட் 19 தொற்று காலத்திலும் தங்களுடைய செல்வங்களை பெருமளவு பெருக்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரும் பணக்காரர்கள் மீது செல்வ வரி உள்ளிட்ட இதர வரிகளை விதித்து அரசு வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென்று இடதுசாரிகள் தரப்பில் மீண்டும்,
மீண்டும் வலியுறுத்திய பிறகும் மோடி அரசு அந்த திசைக்கே போகவில்லை.

சுகாதாரத்துறையில் முதலீட்டை அதிகரிப்பதாக சொன்னாலும் கூட கோவிட்19 நோய்த்தடுப்பிற்காக வெறும் 35,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. 130 கோடி மக்களைக் கொண்ட நமது நாட்டில் கொரானா நோயை எதிர்கொள்வதற்கும், மக்களை பாதுகாப்பதற்கும் இது எந்த வகையிலும் போதுமானதல்ல. ஒரே நாடு, ஒரே ரேசன் என ஆடம்பரமாக அறிவிக்கப்பட்டு 69 கோடி மக்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வோம் என
அறிவிக்கப்பட்டாலும் கூட அதை முழுமையாக நிறைவேற்றும் வகையிலான நிதி ஒதுக்கீடு என்பது நிதி நிலை அறிக்கையில் இல்லை. 

ஏற்கனவே ஊரக வேலை உறுதித்திட்ட நாட்களை 200ஆக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், சென்ற ஆண்டு திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டை விட ரூ. 38500 கோடி குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சராசரியாக 45 நாட்களே வேலை கிடைக்கும் சூழலில் இந்த குறைவான ஒதுக்கீடு மேலும் வேலை நாள் குறைப்பிற்கே இட்டுச் செல்லும்.

அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் போராடி வரும் இந்த சூழ்நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு அம்சங்கள் உள்ளன. உர மானியம் கடந்த ஆண்டிலிருந்த ரூ. ஒரு லட்சம் கோடியிலிருந்து, ரூ. 29,000 கோடியாக பெருமளவு வெட்டி சுருக்கப்பட்டிருக்கிறது.
விவசாய கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடும் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. விவசாயிகளின் குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்வதற்கான ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லை. அதே போல மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என போராட்டங்கள் நடைபெறும் நிலையில் தனியாரை மின்சாரத் துறையில் ஊக்குவிப்பதற்கான அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதோடு, மின்சாரத்துறை சீர்திருத்தங்களுக்காக மூன்று லட்சம் கோடி ரூபாய் அளிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. இது மின்சார துறையை தனியார் மயப்படுத்துவதற்கான ஏற்பாடாகும். 

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக அதிகரித்து லாபத்தில் இயங்கும் ஆயுள் காப்பீடு நிறுவனம்உள்ளிட்ட முக்கிய பொதுத்துறைகளின் பங்குகள் விற்கப்படும் என்ற ஆபத்தான முன்மொழிவை கொண்டிருக்கிறது இந்த நிதி நிலை அறிக்கை. இது மிகவும்
மோசமான அறிவிப்பாகும் என்பதோடு பொதுத் துறைகளை அடியோடு நாசமாக்கும் செயலாகும். கடந்த நிதிநிலை அறிக்கையில் 1.75 லட்சம் கோடிக்கு பொதுத்துறையில் பங்குகள் விற்பனை செய்யப்படும் என்ற நிலையில் இப்போது அது 2.1 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. சுயசார்பு பொருளாதாரம் என்று மோடி அரசு தம்பட்டம் அடிப்பதற்கு நேர்மாறாகவே பட்ஜெட்
கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பல கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும், இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கை வகிக்கும் சிறு-குறு தொழில்களுக்கு ரூ.15,700 கோடி ஒதுக்கப்படும் எனும் அறிவிப்பு போதுமானதல்ல என்பதோடு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிக தாராளமாக சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டில் தயாரிப்போம் எனும் முழக்கத்தை முன் வைக்கும் அரசு உள்நாட்டு சிறு-குறு தொழில்களை அழிக்கவே விரும்புகிறது என்பதை இந்த நிதி நிலை அறிக்கையின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

சென்னையில் 119 கி.மீ தூரத்திற்கான மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்திற்காக ரூ.63,246 கோடி ஒதுக்கப்படும் எனும் அறிவிப்பும், தமிழகத்தில் சாலை விரிவாக்கத்திற்காக 1.03 லட்சம் கோடி சாலைத்திட்டங்கள் உருவாக்கப்படும் எனும் அறிவிப்பும் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்வைத்த அறிவிப்பாகவே
உள்ளது. ஏனெனில் மதுரையில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உருப்படியான அறிவிப்போ அல்லது பணிகளோ இதுவரை துவங்கப்படாத நிலையில் இத்தகைய அறிவிப்புகளும் அப்படித்தானோ என
எண்ணத் தோன்றுகிறது. ஏற்கனவே உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்காமல் புதிய சாலை திட்டங்களை அறிவிப்பதால் யாருக்கும்
பலன் இருக்கப் போவதில்லை. சமையல் எரிவாயு விலையை வரைமுறையற்று ஏற்றி விட்டு, மானியமும்
முறையாக வந்து சேராத நிலையில் ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு என்ற அறிவிப்பு கேலிக்கூத்தாகவே உள்ளது. எனவே, மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையை தொகுத்துப் பார்க்கும் போது, மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்காமலும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை அளிக்காமலும், இன்றைக்கு நாட்டில் முன்னுக்கு வந்திருக்கும் விலை உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு தீர்வளிக்காமலும் பெரும் ஏமாற்றமளிக்கும் வெற்று
அறிக்கையாகவே இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது என மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுவதோடு, உணவு, வேலை பாதுகாப்பை முன்னிறுத்தி, கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்டுக்கு எதிரான போராட்டங்களை நடத்திட வேண்டுமென பொதுமக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.