சென்னை:
கொரோனா காலத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போன்று செயல்பட்டு, இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நூற்பாலையில் பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவிகளை மீட்கக் கோரித் தொடுத்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, இ-பாஸ் இல்லாமல் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முறையாக விண்ணப்பித்தவர்களால் இ-பாஸ் பெற இயலாத நிலையில், தரகர்கள் மூலம் 500 ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று அதிகாரிகள், இ-பாஸ்கள் வழங்குவதாகக் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
கொரோனா காலத்திலும், ரத்தத் தாகம் கொண்ட ஓநாய்கள் போலச் செயல்படும் ஊழல் அரசு ஊழியர்களுக்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நூற்பாலைகளில் இருந்து மீட்கப் பட்ட மாணவிகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந் தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப் படுகின்றனரா எனக் கண்காணிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.