tamilnadu

img

அமைச்சரவையின் புதுமுகங்களின் வாழ்க்கை குறிப்பு....

தமிழகத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-

கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி: வயது 74. ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: வாணியம்பாடி அருகில் ஒரு சிறிய கிராமத்தில் 1959 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பிறந்தார். சட்டப்படிப்பு முடித்தவர். தற்போது சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கிறார்.2006-2011-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி மேயராகவும் பொறுப்பு வகித்தார். 2016 ஆம் ஆண்டு சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தற்போது மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.மா.சுப்பிரமணியனுக்கு காஞ்சனா என்ற மனைவியும், இளஞ்செழியன் என்ற மகனும் இருக்கிறார்கள். இளஞ்செழியனும், அவரது மனைவி கிரித்தாவும் மருத்துவர்கள் ஆவார்கள்.

வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி: இவரது சொந்த ஊர் மதுரை வெளிச்சநத்தம். பி.ஏ. படித்துள்ளார். மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்.கடந்த 2006 ஆம் ஆண்டு சோழவந்தான் தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்றார். அதன்பின் 2016-ம் ஆண்டு தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்: குன்னம் தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பொறியாளரான இவருக்கு வயது 51.  இவரின் சொந்த ஊர் அரியலூர் ராஜாஜி நகர். சிவசங்கருக்கு டாக்டர் காயத்ரிதேவி என்ற மனைவியும், சிவசரண், சிவசூர்யா என்ற 2 மகன்களும் உள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு: 58 வயதாகும் இவர் சென்னை ஓட்டேரியில் வசித்து வருகிறார். அவரது மனைவி பெயர் சாந்தி. பி.எஸ்.விக்னேஷ், பி.எஸ்.ஜெயசிம்மன் என்ற 2 மகன்களும், பி.எஸ்.ஜெயகல்யாணி என்ற மகளும் உள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள பி.கே.சேகர்பாபு, 2001, 2006 ஆம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.2016 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. சார்பில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதும் அதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்: தியாகராஜன்: மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்றவர். இவரது தந்தை பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருந்தவர்.

பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் (61): ஆவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர். பாத்திமா கனி என்ற மனைவியும், ஆசிம் ராஜா என்ற மகனும் உள்ளனர்.
ஆவடி சட்டமன்ற தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் பாண்டிய ராஜனை வீழ்த்தி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (66) : விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர். இவருக்கு சைத்தானி பீ மஸ்தான் என்கிற மனைவியும் கே.எஸ்.எம்.மொக்தியார் மஸ்தான் என்கிற மகனும், மைமுன்னிசா, ஜெய் முன்னிசா, தை முன்னிசா என்கிற மகளும் உள்ளனர். செஞ்சி தேசூர் பாட்டையில் வசித்து வருகிறார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 44 வயதாகிறது. இவர் எம்.சி.ஏ. பட்டதாரி. மறைந்த முன்னணி தி.மு.க. தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் பேரன், முன்னாள் எம்.எல்.ஏ. மறைந்த அன்பில் பொய்யாமொழியின் மகன்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. சிவ.வீ.மெய்யநாதனுக்கு 51 வயதாகிறது. எம்.சி.ஏ. படித்துள்ளார். இவரது சொந்த ஊர் அறந்தாங்கி தாலுகா மறமடக்கி ஆகும்.
தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி.கணேசன்:  (57) திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்: வயது 54. குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றி பெற்றவர். எம்.ஏ., எம்.பில் முடித்தவர். இவர்  மாவட்ட ஊராட்சி தலைவராக பதவி வகித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன்: மருத்துவரான இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றவர். எம்.பி.பி.எஸ்., எம்.டி. படித்துள்ள இவர் டாக்டர் பணி செய்து வருகிறார். தற்போது ராசிபுரத்தில் வசித்து வருகிறார்.இவருக்கு சிவரஞ்சினி என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். டாக்டர் மதிவேந்தன் ராசிபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சரோஜாவை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்: வயது 53. தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்றவர். எம்.காம்., பிஎட்., படித்துள்ளார்.இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தி.மு.க மகளிரணியில் உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் கே.செல்வராஜ் பி.ஏ.பி.எல் படித்துள்ளார். இவர்களுக்கு பட்டதாரியான எஸ்.திலீபன்,  வழக்கறிஞர் எஸ்.கே.உதயசூரியன் ஆகிய மகன்கள் உள்ளனர். தாராபுரம் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை தோற்கடித்தவர்.

திமுக அமைச்சரவையில் 75 வயதாகும் பொதுச் செயலாளர் துரைமுருகன், ராணிப்பேட்டை காந்தி இருவரும் வயதில் மூத்தவர்கள் ஆவார். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஈரோடு முத்துசாமி, இருவருக்கும் 72 வயது.  எ.வ. வேலு, க.பொன்முடி ஆகியோருக்கு வயது 71. ரகுபதி 70. கே.என். நேரு 69, ஐ.பெரியசாமி 68, செஞ்சி மஸ்தான் 66 வயது. ராசிபுரம் மதி வேந்தன் மிகவும் இளையவர். அவருக்கு வயது 36. அதற்கு அடுத்த இடத்தில் அன்பில் பொய்யாமொழி மகேஷ் வயது 44.