tamilnadu

img

அண்ணா பல்கலை.யில் பயோ டெக்னாலஜி மேற்படிப்புகள் நிறுத்தி வைப்பு....

சென்னை:
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் கற்பிக்கப் படும் முதுகலை உயிரி தொழில்நுட்பவியல் (பயோ டெக்னாலஜி) பாடப்பிரிவுகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பவியல் துறையின் கண்காணிப் பில், நாடு முழுவதும் முதுகலை உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகள் சில உயர் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படுகிறது. அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்திலும் மத்திய உயிரி தொழில் நுட்பவியல் துறையின் பங்களிப்போடு, முதுகலை உயிரி தொழில் நுட்பவியல் மற்றும் கம்பியூடேஷனல் பயோடெக்னாலஜி பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.மத்திய அரசு பின்பற்றும் 49.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இப்பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு வரை இப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வை, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் நடத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வை மாநிலங்களில் உள்ள அந்தந்த கல்வி நிறுவனங்களே நடத்திக் கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து, நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசிடம் அனுமதி கோரியது. ஆனால், தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப் படையில் மாணவர் சேர்க்கையை நடத்தினால் மட்டுமே இதற்கு அனுமதி அளிக்க முடியும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப் படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது.ஆண்டுதோறும் 2 பாடப் பிரிவுகளிலும் மொத்தம் 45 மாணவர்கள் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்படுவார்கள். இந்த பாடப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது குறிப் பிடத்தக்கது.இந்த விவகாரம் குறித்து அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் கேட்டபோது, “இடஒதுக்கீடு விவகாரம் காரணமாக முதுகலை உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகளுக்கு தமிழக அரசு தற்போது அனுமதி மறுத்துள்ளது. தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 10 மாணவர்கள் வரை இந்த பாடப்பிரிவுகளில் சேர்வார்கள். தற்போது அந்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.