சென்னை:
அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
அய்யா வைகுண்டரின் 189?வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் தென்முனையில் சமூக சிந்தனையை பரப்பியதோடு, சமூகத்தின் அடித்தட்டு மக்களை ஒன்றுபடுத்தி, அடிமைத்தனத்தை உருவாக்கிய மனுதர்மவாதிகளின் ஆதிக்கச் செயலை முறியடித்து, மக்களால் அவதார புருசராக போற்றப்பட்டவர் அய்யா வைகுண்டர்.தீண்டாமையை ஒழிக்கும் வகையில் அந்த காலத்திலேயே ‘சமபந்தி’ விருந்து நடைபெற காரணமாக இருந்தவர் அய்யா வைகுண்டர். சுயமரியாதைக்கு வித்திட்டவர், சமூகநீதியை நிலைநாட்ட பாடுபட்டவர், சுரண்டலுக்கு எதிராக போராட்டத்தை நடத்தியவர், கல்விக்கும், சிறுதொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர் அய்யா வைகுண்டர்.சமய சீர்திருத்தவாதியாக, சமூக நெறியாளராக, பொருளாதார மேன்மைக்கு வழி சொல்லும் வித்தகராக, மக்களிடையே சமத்துவம் காணதுடித்த மனிதாபிமானியாக அய்யா வைகுண்டர் ஆற்றிய பெரும் பணிகளை தமிழ்ச்சமூகம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், இந்த இனிய விழா நடைபெறும் நாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.