tamilnadu

img

தமிழகத்தின் 3 அணைகளுக்கு நீர்ப்பாசன கட்டமைப்பு விருது  

உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கான விருதுகளுக்கு கல்லணை, வீராணம் ஏரி மற்றும் காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய 3 கட்டமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஆணையம் அறிவித்துள்ளது.  

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகள் மற்றும் நீர் சேமிப்பு விருதுகளை அறிவித்து வருகிறது.

ஒவ்வொரு நாட்டிற்கும் 4 விருதுகள் சர்வதேச அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டிற்கு இந்தியாவிற்கு 4 விருதுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு 3 விருதுகளை பெற்றுள்ளது.  

அந்த வகையில் ஜூலை 2021ல் தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம், பேச்சிப்பாறை அணை, மதுராந்தகம் ஏரி, செம்பரம்பாக்கம ஏரி ஆகிய 6 நீர்த்தேக்க கட்டமைப்புகளாக, உலக பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளாக அறிவிக்கக்கோரி அனைத்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்பட்டது.

இதையடுத்து டிசம்பர் 2021ல் சர்வதேச நீர்ப்பாசன மற்றும் வடிகால் ஆணையத்திலிருந்து ஆய்வுக்குழு தமிழ்நாடு நீர்வளத்துறை விண்ணப்பித்த கட்டமைப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.  அதில் கல்லணை, வீராணம் ஏரி மற்றும் காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய 3 அணைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த விருதுகள் நீர்ப்பாசன கட்டமைப்புகளை பராமரித்தல் மற்றும் நீர் சேமிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச அமைப்பால், 2022 நவம்பர் 7 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

அதனைதொடர்ந்து 2022 ஆண்டிற்கான விருதுக்கு தமிழ்நாட்டின் சார்பில் 10க்கும் மேற்பட்ட பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கான உரிய ஆவணங்களுடன் முன்மொழிவு அனுப்பப்பட உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.