tamilnadu

img

தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 1 கோடி தடுப்பூசிகள் வழங்குக... மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்....

சென்னை:
தமிழ்நாட்டுக்குக் குறைந்த பட்சம் 1 கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என திமுகபொருளாளரும், நாடாளு மன்ற திமுக குழுத்தலைவருமான டி.ஆர்.பாலு,  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திமுக வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

‘‘கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் சவாலான சூழலில், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று, பல்வேறு பணிகளை அதிவேகத்துடன் மேற்கொண்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, 18 முதல் 44 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிசெலுத்தும் செயல்திட்டத்தை தமிழக அரசுதொடங்கி உள்ளது. ஆனால், இதற்காக மத்திய அரசு வெறும் 13.85 லட்சம் ஊசிகளையே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவானது.
எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை வியாழனன்று (மே 20) நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கு உடனடியாக குறைந்தபட்சம் ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றினை அளித்தார்.

மேலும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துக்கு சொந்தமான செங்கல்பட்டில் அமைந்துள்ள ஹெச்.எல்.எல். நிறுவனம் தற்சமயம் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடாமல் உள்ளது. இங்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய கூடுதலாக ரூ.300 கோடி முதலீடு செய்ய வேண்டும். எனவே, தமிழகத்தில் தடுப்பூசி தேவையைக் கருத்தில்கொண்டு உடனடியாக ஹெச்.எல்.எல். ஆலையில் கூடுதல் முதலீடு செய்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது, 18 வயது முதல் 44 வயதினருக்கு ஜூன், ஜூலை ஆகியமாதத்திற்கான தடுப்பூசிகளின் எண்ணிக்கை மாதம் ஒன்றுக்கு 11 லட்சத்து 51 ஆயிரத்து 760 எனவும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜூன் மாதத்திற் காக 6 லட்சத்து 55 ஆயிரத்து 330 (ஜூன் மாதம் முதல் 15 நாட்களுக்கு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைப்போலவே, ஜூன் மாதம் இரண்டு மற்றும் மூன்றாவது வாரங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், செங்கல்பட்டில் அமைந்துள்ள ஹெச்.எல்.எல். தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையைப் புனரமைக்கும் பணியைத் துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் நல்ல முடிவினை மத்திய அரசு மேற்கொள்ளும் என தமிழக முதல்வரிடம் தெரிவிக்குமாறும்’’ கூறினார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.