tamilnadu

img

அரசியல் தேவைக்காக ராணுவ ரகசியங்களை வெளியிடுகிறார் மோடி மீது அ.சவுந்தரராசன் குற்றச்சாட்டு

சென்னை, ஏப். 13 -அரசியல் ஆதாயத்திற்காக ராணுவ ரகசியங்களை மோடி வெளியிட்டு வருகிறார் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் கூறினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று (ஏப்.12) கிருஷ்ணாம்பேட்டை மார்க்கெட்டில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.சவுந்தரராசன் பேசியதன் சுருக்கம் வருமாறு:ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று சொன்னபாஜக ஆட்சியில் 6 லட்சம்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.80 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனை ரத்து செய்ய மறுத்த பாஜக அரசு, 35 முதலாளிகளுக்கு ஒரே ஆண்டில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தது. நாடு முழுவதும் கடன் தொல்லையால் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.


தமிழகத்தில் மட்டும் 400பேர் தற்கொலையால் இறந்துள்ளனர்.காங்கிரஸ் ஆட்சியில் 11 முறை துல்லியத்தாக்குதல் நடந்துள்ளது. அதை ஒருபோதும் அந்த ஆட்சி வெளியிட்டதில்லை. ஆனால் ஒரேஒருமுறை நடத்திவிட்டு, தன்னுடைய அரசியல் தேவைக்காகமோடி பயன்படுத்தி வருகிறார். 12ஆண்டுக்கு முன்பே செயற்கைகோளை தகர்க்கும் வல்லமை இந்தியா பெற்றுவிட்டது. ஆனால், இப்போதுதான் செய்ததுபோல் ராணுவ ரகசியங்களை மோடி வெளியிட்டு வருகிறார். ராணுவத்தின், விஞ்ஞானிகளின் சாதனை தனது சாதனையாக கூறும் மலிவான பிரதமரை நாடு இதுவரை பார்த்ததில்லை. எனவேதான் விஞ்ஞானிகள், முன்னாள் தளபதிகள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பாஜக தலைவர்கள் 40 விழுக்காடு கமிஷன் பெற்றுள்ளனர். பாஜக ஆட்சியில், சாதனையாக சொல்வதற்கு ஒன்றுமில்லாததால் பாகிஸ்தானை காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். புல்வாமா தாக்குதலில் ஆப்பசைத்த குரங்காக முழிக்கிறார்கள்.


மதசச்சரவுகளை உருவாக்கி வெறுப்பையும், நெருப்பையும் உமிழ்கிறார்கள். களவானிதனத்தாலும், கையாலாகாதனத்தாலும் அதிமுக அனைத்தையும் உதிர்த்துவிட்டு நிற்கிறது. ஜிஎஸ்டி, நீட், உதய் திட்டத்தை எதிர்த்த அதிமுக, பாமக, தேமுதிக கட்சிகள் இப்போது பாஜக-வுக்கு ஜால்ரா அடிக்கின்றன. நீட் ரத்து செய்யப்படும், ஜிஎஸ்டி மாற்றி அமைக்கப்படும் என்று திமுக தலைமையிலான அணி சொல்வதை போல, அதிமுக அணி சொல்ல முடியுமா? அறிவுக்கு பொருந்தாதவற்றை செய்தால் அதனை துக்ளக் தனம் என்பார்கள். மோடி 100 துக்ளக்குகளுக்கு சமமானவர். இந்த தேர்தலில் பாஜக-வையும், அதிமுக-வையும் அகற்றுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்திற்கு சிபிஎம் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், செயற்குழு உறுப்பினர் எம்.தாமோதரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி, திமுக பகுதிச் செயலாளர் தா.வேலு, காங்கிரஸ் தலைவர்ஆதிநாராயணன், சிபிஎம் நிர்வாகிகள் ஆர்.எம். ஆனந்தன், ஆர்.வினாயகம் உள்ளிட்டோர் பேசினர்.