சென்னை:
காலமுறை ஊதியம் கோரி செவ்வாயன்று (செப்.8) தமிழகம் முழுவதும்சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
சத்துணவு திட்டத்தில் 38 வருடங்களாக பணியாற்றும் ஊழியர்களை அரசு ஊழியராக அறிவித்து, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாயும், பணிக் கொடையாக 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள் பேசுகையில், சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 60 வயது உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றிதெரிவிப்பதாகவும், இதர கோரிக்கை களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்என்றும் வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.கேசவன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.சபந்தி, செயற்குழு உறுப்பினர் ஜெ.ரமணி, மாவட்ட பொருளாளர் ச.சுந்தரமூர்த்தி, முன்னாள் மாநிலச் செயலாளர் சொர்ணம் உள்ளிட்டோர்பேசினர்.