சென்னை:
நபிகள் நாயகத்தை பழித்த பாஜக நிர்வாகியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தியுள்ளது.
தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன் மற்றும் க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை:
மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் மீது அவதூறுபொழிந்தும், அவரை இழித்தும், பழித்தும் பேசியுள்ளார். முஸ்லிம் சமூகத்தை மிக மோசமாகவும், குறிப்பாக அவர்தம் பெண்களைத் தவறாகவும் பேசியுள்ளார். இந்த மதவெறிப் பேச்சை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது.இந்த நபர் “நீ மோடி மீது கை வைத்தால் நான், முகமது நபி மீது கைவைப்பேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அரசு பற்றிய விமர்சனத்தை அரசியலாக எதிர்கொள்ளாமல் மதரீதியாக எதிர்கொள்ளும் அபாயகரமான போக்கை இவர் கைக்கொள்கிறார். இதை காவல்துறை கணக்கில் கொண்டதா என்று தெரியவில்லை.பாஜக நிர்வாகியின் நோக்கம் தமிழகத்தில் நிலவும் மதநல்லிணக்கத்தைக் கெடுத்து இங்கேமதப் பகைமையை மூட்டுவதுதான். இது சமூகவிரோதச் செயல் மட்டுமல்லாது சட்டவிரோதச் செயலும் கூட. கந்த சஷ்டி கவசத்தை பழித்துப்பேசியதற்காக கருப்பர் கூட்டம் எனும் அமைப்பினர் மீது குண்டர் சட்டத்தை பிரயோகித்தது தமிழக அரசு. அதுபோல கல்யாணராமனையும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழகஅரசை மக்கள் ஒற்றுமை மேடை வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தங்களது கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்ட குற்றவாளி என்று அதிமுக அரசு அவரிடம் பதமாக நடந்து கொண்டால் அது படுமோசமான முன்னுதாரணமாக இருக்கும். அரசியல் உறவை விட மாநிலத்தில் நிலவும் மக்கள்ஒற்றுமையைக் காக்க வேண்டியதும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியதும் அரசின் தலையாய கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று மேடை வலியுறுத்துகிறது.மக்களை மத அடிப்படையில் பிளந்து அரசியல் ஆதாயம் அடைவதே பாஜகவின் தேர்
தல் உத்தியாகும். வடமாநிலங்களில் முஸ்லிம் எதிர்ப்பு பேசியே தன்னை வளர்த்துக் கொண்டது
அந்தக் கட்சி என்பதை அறிவோம். அது போன்றதந்திரத்தை தமிழகத்திலும் கடைப்பிடிக்க அதுமுனைந்திருக்கிறது.தேர்தல் நெருங்க நெருங்க மத மாச்சரியங்களை கிளறிவிடுவதில் அது தீவிரம் காட்டும்.ஆனாலும் தமிழக மக்கள் மதப்பகைமைக்கு இடம் தந்துவிடக் கூடாது, அதனது தந்திரத்திற்கு பலியாகிவிடக் கூடாது என்று அனைத்து மதத்தவரையும் மேடை உரிமையோடு கேட்டுக்கொள்கிறது.
மதவெறிக்கு தக்க பதிலடி மத நல்லிணக்கமே என்பதை உணர்ந்து அதை காத்து நிற்க வேண்டும். பாஜகவின் ஆத்திரமூட்டும் பேச்சுக்களுக்கு இரையாகாமல், அவற்றை ஜனநாயகவழியிலும் சட்டரீதியிலும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் மேடை கேட்டுக் கொள்கிறது. இது விஷயத்தில் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள இஸ்லாம் மதத்தவரின் உணர்வுகளோடு மேடைஒன்றிணைந்து நிற்பதோடு, பாஜக நிர்வாகியின்மதவெறிப் பேச்சைக் கண்டிக்க நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள அனைத்து மதத்தவரும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.