tamilnadu

img

பாஜக பிரமுகர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது!

கோவை, பிப்.11-
தமிழகத்தில் தொடர்ந்து மத ரீதியான வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வந்த பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கலந்து கொண்டு பேசுகையில், 
இஸ்லாமியர்கள் குறித்தும், முகமது நபி குறித்தும் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசினார். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் திட்டமிட்டே கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு கல்யாணராமன் பேசியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் கல்யாணராமன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 
இதற்கிடையே, இவர் தொடர்ந்து மத பிரிவினையை தூண்டும் வகையிலும், பெண்கள் குறித்து மிகவும் ஆபாசமாகவும், இழிவாகவும் பேசி வருவதற்கு எதிராக பல மாவட்டங்களில் இவர் மீது புகார் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. 
இந்நிலையில், கல்யாணராமனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளித்த பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் இன்று (வியாழக்கிழமை) மாலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.