tamilnadu

சென்னையில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை

சென்னை:
சென்னை பல்லாவரத்தில் தனக்கு தண்டனை வழங்கிய ராணுவ உயர் அதிகாரியை  ராணுவ வீரர் சுட்டுக்கொன்று,அவரும்  தற்கொலை செய்து கொண்டார். சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான குடியிருப்பு பல்லாவரத்தில் உள்ளது. அந்தக் குடியிருப்பில் உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த ஹவில்தார் என்ற அந்தஸ்துடைய அதிகாரியான பிரவீன்குமார் ஜோஷி என்பவர் தங்கியிருந்தார். அவரது கட்டுப்பாட்டின் கீழ் பஞ்சாப்பைச் சேர்ந்த சிப்பாய் அந்தஸ்துடைய ஜெக் ஷீர் சிங் ( வயது 21) என்ற ரைபிள் மேன் வீரர் பணியாற்றி வந்தார். 

ஆயுதக் கிடங்கு நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ஜெக் ஷீர் அடிக்கடி விடுமுறை எடுத்ததால் பிரவீன் குமார் ஜோஷியின் கோபத்திற்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதனால் உயர் அதிகாரி யிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டதால் அவருக்கு தண்டனை விதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் திங்களன்று  இரவு ஜெக் ஷீர் சிங் பாதுகாப்புப் பணிக்கு தாமதமாக வந்ததால் பிரவீன் குமார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெக் ஷீர் சிங், அதிகாலை 3 மணியளவில் ராணுவக் குடியிருப்பு அறையில் உறங்கிக் கொண்டிருந்த பிரவீன் குமார் ஜோஷியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற ஜெக் ஷீர் சிங், பின்னர் அவரும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அதிகாரிகள், பல்லாவரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். ராணுவ மேஜர் உல்லாஸ் குமார் காவல்துறை யிடம் புகார் அளித்தார். காவல்துறையினர் இருவரது சடலங்களையும் மீட்டு நந்தம் பாக்கம் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடற்கூராய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது.