tamilnadu

img

கட்டடக் கலைப் படிப்பு: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இடஒதுக்கீடு அறிவிப்பு

சென்னை:
கட்டடக்கலை படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர் பாக இரண்டு வாரங்களில் அறிவிப்பாணை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கிண்டியில் உள்ள கட்டடக்கலை கல்லூரியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில், பி.ஆர்க் பிரிவில் மாணவர் சேர்க்கை கோரி விண்ணப்பிக்க அனுமதி மறுக் கப்பட்டதை எதிர்த்து, சிங்கப்பூரைச் சேர்ந்த சிவானி அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, ”வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 15 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது, அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் வழங்க வேண்டுமா அல்லது கூடுதலாக வழங்க வேண்டுமா என கட்டடக் கலை கவுன்சில் அறிவிக்காததால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் படவில்லை” என அண்ணா பல் கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கட்டடக்கலை கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மொத்த மாணவர்கள் இடங்களில் 15 விழுக்காட்டை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்க வேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் முன்னதாகவே அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.கட்டடக்கலை கவுன்சில் தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, பிஆர்க் படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிவிப்பாணையை வெளியிடுமாறு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.