சென்னை, ஏப். 22-அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி,சிதம்பரம் நாடாளுமன்றத் தொகு திக்கு உட்பட்டது. சிதம்பரம்தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார்.தேர்தலன்று பொன் பரப்பி தலித் மக்களை வாக்களிக்க விடாமல் பாமகவினர் வன்முறையில் ஈடுபடு வார்கள் என்பதை முன்னரே யூகித்திருந்த தலித் மக்கள், காலையில் வாக்குப் பதிவுதுவங்கியதிலிருந்து அதிவிரைவாக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து கொண்டிருந்தனர். மத்திய, மாநில அரசுகளின் கொடுங் கோல் ஆட்சிகளுக்கும், சாதி ஆதிக்கத்திற்கும் எதிராக பொன்பரப்பியின் ஒவ்வொரு வாக்கும் ஒரு ஆயுதமாகப் பதிவாகிக்கொண்டிருந்தது.இதனை சகித்துக்கொள்ள முடியாமல் பாட்டாளி மக்கள்கட்சி மற்றும் இந்து முன்ன ணியைச் சேர்ந்தவர்கள் திடீரென காரணம் ஏதுமின்றி வன்முறையில் ஈடுபட்டனர். சாலை சந்திப்பில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடியை கிழித்து எறிந்தனர். திருமாவளவன் அவர்களின் சின்னமான பானையை எடுத்து வந்து வீதியில் உடைத்தனர். தொடர்ந்து பெரும் கூட்டமாக திரண்ட வன்முறையாளர்கள் தலித் குடியிருப்புக்குள் புகுந்துவீடுகளின் மீது தாக்கு தலைத் தொடுத்தனர். ஓடுகள்அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இவ்வாறு சுமார் 63 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.வீடுகளுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் பதினோரு இருசக்கர வாகனங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் உண்மை அறியும் குழு பொன்பரப்பி சென்று விபரங்களை திரட்டி,துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளது.ஜனநாயகக் குடியரசு வழங்கியுள்ள ஆகப் பெரும் உரிமையான வாக்குரிமையைக் கூட பயன்படுத்த விடாமல்தடுத்து வன்முறையில் ஈடுபட்ட சாதி ஆதிக்க வெறியர்களையும், இந்து முன்னணி வன்முறையாளர்களையும் கண்டித்தும், உரிய பாதுகாப்பு வழங்கத் தவறியதோடு, பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதும் பொய்வழக்கு பதிந்துள்ள மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் சார்பில் சென்னை மற்றும் அரியலூரில் ஏப்ரல் 29அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது. சென்னையில் மாநில தலைவர் பி.சம்பத், அரியலூரில் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பங்கேற்கிறார்கள்.